சமையல் உப்பா? கொக்கையன் போதைப் பொருளா? – நண்பரிடமே ரூ.10 லட்சம் ஏமாற்றிய கும்பல்!

சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பை, கொக்கைன் போதைப் பொருள் எனக் கூறி 10 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் கொக்கைன் போதை பொருள் பயன்பாடு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து பணகுடி போலீசார் சந்தேகப்படும்படியான வாகனங்களை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெனிபர் என்பவரின் காரை மறித்து சோதனை செய்யும்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான பொருள் மற்றும் நபர்கள் மூன்று பேர் இருந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து காரையும், காரில் இருந்த மூவரையும் அந்த மர்ம பொருளையும் பணகுடி காவல் நிலையம் கொண்டு வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூவரும் சேர்ந்து நண்பனை மோசடி செய்தது தெரியவந்தது. அதாவது தூத்துக்குடியை சேர்ந்த கற்குவேல் அய்யனார் மற்றும் சென்னையில் உள்ள இப்ராஹீம் ஆகிய இருவரும் நண்பர்கள். கற்குவேல் அய்யனார் தொழில் செய்வதற்காக, இப்ராஹீமிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு இப்ராஹீம் பணம் கொடுக்க தயங்கியுள்ளார். இதனால் அவரிடம் இருந்து நூதன முறையில் பணம் பறிக்க கற்குவேல் அய்யனார் மற்றும் அவரது நண்பர்கள் திட்டம் தீட்டினார்.
image
இந்த திட்டத்தில் கற்குவேல் அய்யனார், தாம்சன் மற்றும் அலெக்ஸ் மூவரும் சேர்ந்து, இப்ராஹீமிடம் தங்களிடம் ஏழு கிலோ கொக்கைன் போதை பொருள் இருப்பதாக கூறி, அதனை வங்க 10.5 லட்சம் ரூபாய் வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் அதை விற்றவுடன் 50 லட்சம் திரும்பத் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இந்த ஆசை வார்த்தைக்கு இணங்கிய இப்ராஹீம் கடந்த ஒரு மாதமாக ஒரு லட்சம், இரண்டு லட்சம் என மொத்தம் 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இவர்களிடம் வழங்கி உள்ளார்.
எப்படியும் நண்பர் கொக்கைனை கேட்பார் என்று அறிந்து, மூவரும் கடையில் ஏழு கிலோ சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை வாங்கி அதனை நன்கு பேக் செய்து எடுத்துக்கொண்டு காரில் சென்னைக்கு கிளம்ப முற்பட்டனர். அப்போது வழியில் பணகுடி போலீசாரிடம் மாட்டிக் கொண்டனர். இருப்பினும் அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 7 கிலோ உப்பை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். சமையல் உப்பை கொக்கைன் என கூறி நண்பரை ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.