இந்தியாவில் 64% பெண்கள் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஒரு மாதத்திற்கு 1 பில்லியன் நாப்கின்களும், ஆண்டுக்கு சராசரி 12.3 பில்லியன் நாப்கின்களும் பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக்கை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு வேதிப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தற்கால சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு அதிகளவிலான பாதிப்புகளைக் கொடுக்கின்றன.
மாதவிடாய் சமயங்களில் பயன்படுத்தப்படும் நாப்கின்கள் மரக்கூழ், பிளாஸ்டிக் மற்றும் பாலிஎத்திலீன் கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக அதிக ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டதால் SAP (Super Absorbent Polymers) எனப்படும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. ஆனால் இது இயறக்கைக்கு மட்டுமல்லாது உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடியது.

தவிர இவை ‘டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம்’ (Toxic shock syndrome) எனும் பாதிப்புக்கும் காரணமாகிறது. எனவே 1980-களிலேயே SAP என்ற ரசாயனத்தை, அமெரிக்கா தடை செய்துள்ளது. ஆனால் தற்போது பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களில் இதே ரசாயனம் சேர்க்கப்படுவதாக நிறுவன அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரசாயனம் கர்ப்பப்பை புற்றுநோய், பலவீனமான கரு உருவாவது மற்றும் நீரிழிவுக்கு காரணமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பொன்னேரி அரசு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் அனுரத்னாவிடம் கேட்டபோது “சானிட்டரி நாப்கின்களால் பெரும்பாலான பெண்களுக்கு அலர்ஜி, சருமத்தில் அரிப்பு, சொறி போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. சிலருக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுவதால் அதற்கென தனி சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். அதிக நேரம் இந்த நாப்கின்களை பயன்படுத்தினால் பூஞ்சைத் தொற்றும் ஏற்படலாம்.
ஒரு நாப்கினின் 75% பயன்பாடு முடிந்தவுடன் அதனை அகற்ற வேண்டும். ஒரு நாப்கினை அதிகபட்சம் 6 மணிநேரத்துக்குதான் வைத்திருக்க வேண்டும். காட்டன் உள்ளாடைகளையே பயன்படுத்த வேண்டும். ஒரு நாளைக்கு 2 முறை உள்ளாடைகளை மாற்றுவது சிறந்தது. ஆனால், பெரும்பாலான பெண்கள் காலை முதல், இரவு வரை ஒரே நாப்கினை பயன்படுத்துவதால் பல்வேறு தொற்றுகளுக்கு உள்ளாகிறார்கள்” என்றார்.

நாப்கினுடன் டயாக்சின், பெட்ரோகெமிக்கல்ஸ் மற்றும் வாசனை திரவம் போன்ற மற்ற ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால் அதிக பயன்பாட்டின் போது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். இதில் கருப்பை புற்றுநோய் உண்டாகக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) எனும் ரசாயனம் சேர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த ரசாயனம், 70 நாடுகளால் தடை செய்யப்பட்ட ஒன்று. மேலும் நாப்கின்கள் `மருத்துவ தயாரிப்பு’ என்று வகைப்படுத்தப்படுவதால், அதன் மூலப்பொருள்களும் இதில் குறிப்பிடப்படுவதில்லை.
இந்த ரசாயனம் குறித்து சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவிடம் கேட்டோம்… “ஆஸ்பெஸ்டாஸ், கேன்சரை உண்டாகும் தன்மை கொண்டது என்றாலும், அது பேடுகளில் எங்கு சேர்க்கப்படுகிறது என்பது மிகவும் முக்கியம். இது பேடுகளின் உள்புறத்தில் இருந்தால் பெரிய பாதிப்பு இருக்காது. மாறாக, வெளிப்புறத்தில் இருந்தால் சருமத்தில் பாதிப்புகள் ஏற்படும். பெரும்பாலான நிறுவனங்கள் பேடுகளில் விலை மற்றும் உறிஞ்சும் தன்மையையே முதன்மையாக வைத்து உள்ளதால் சுகாதாரத்தைப் பொருட்படுத்தாமல் ரசாயனங்களைச் சேர்க்கின்றன. மக்கள் வாங்கும் விலையில் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்கின்றன. மற்ற நாடுகள் போல சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்தால், பேடுகளின் விலை உயர்ந்துவிடும்” என்றார்.

மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின் போன்ற பொருள்களை வாங்க முடியாத நிலை, அவற்றால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் உள்ளிட்டவை, மாதவிடாய் கால வறுமை (Period poverty) என்று வரையறுக்கப்பட்டுள்ளன. மாதவிடாய் கால வறுமை கொண்ட இந்தியா போன்ற நாடுகளில், பல வருடங்களாக சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தியும் அவைகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், சுகாதார பிரச்னைகள் உண்டாகின்றன.
ரசாயனங்கள் கொண்ட நாப்கின்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்க்கை முறையில் தயாரிக்கப்பட்ட காட்டன் பேடுகள், மென்ஸ்ட்ருவல் கப் மற்றும் காட்டன் துணிகளைப் பயன்படுத்துவது சிறந்தது. காட்டன் துணிகளையும் ஒருமுறை தான் பயன்படுத்த வேண்டும்; மீண்டும் மீண்டும் துவைத்துப் பயன்படுத்தக்கூடாது.
– தமிழரசி. ஜே