மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியது. நடப்பு நீர்ப்பாசன ஆண்டில், 2வது முறையாக மேட்டூர் அணை, நேற்று அதிகாலை 3.30 மணியளவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. அணை நிரம்பியதால் எச்சரிக்கை சங்கு ஒலிக்கப்பட்டு, 25 நாட்களுக்கு பிறகு உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை தணிந்துள்ளதால், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 29,000 கனஅடியாக சரிந்துள்ளது.
