ஈரோடு மாவட்டத்தில் மது என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் பஞ்சலிங்கபுரம் திருவள்ளுவர் தெரு பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சின்னசாமி (50). இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று திடீரென சின்னசாமி வாந்தி எடுத்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரிடம் விசாரித்த போது, குடி போதையில் பிராந்தி பாட்டிலில் இருந்த பூச்சி மருந்து என நினைத்து குடித்து விட்டதாகவும், இதனால் தனக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாகவும், வாந்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக சின்னசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு அங்கிருந்து வீடு திரும்பிய சின்னச்சாமி மீண்டும் வாந்தி எடுத்ததையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சின்னசாமி உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்