மதுரை: மதுரையில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக மாட்டுத்தாவணி குடியிருப்பு பகுதியில் 2வது நாளாக நீர் சூழ்ந்துள்ளது. மதுரையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. சாத்தையாறு, உத்தங்குடி, ஈச்சமடை ஆகிய கால்வாய்களில் இருந்து வெள்ளநீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாகவும், ஈச்சமடை கால்வாய் சுவர் தனிநபரால் உடைக்கப்பட்டதால் வெளியேறி வரும் தண்ணீராலும், மாட்டுத்தாவணி எதிரே உள்ள டி.எம்.நகரை 2வது நாளாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் நீரில் மூழ்கியுள்ளன. கால்வாய் உடைப்பை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்ணீர் சூழ்ந்துள்ளதால், கோழிப்பண்ணையில் தண்ணீர் புகுந்ததால் 200க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சிகள் இறந்துவிட்டன. மேலும் கோழிப்பண்ணையில் இருந்த பொருட்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக 6 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் மருதுபாண்டி தெரிவித்துள்ளார். தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மீண்டும் தண்ணீர் புகாத வண்ணம் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.