இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நான்கு மாதங்களாக பெய்த இடைவிடாத கனமழை காரணமாக, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவி வருகின்றன. இதையடுத்து, நாட்டு மக்களுக்கு வழங்க, 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கொசுவலைகளை நம் நாட்டில் இருந்து வாங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் இருந்து கடந்த மாதம் வரை கனமழை கொட்டித் தீர்த்தது. அந்நாட்டின் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. ஏராளமான வீடுகள் இடிந்து, மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உலக நாடுகளின் உதவியை கோரியது. இந்நிலையில், வெள்ளம் வடிந்த பிறகு மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவத் துவங்கியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, நாட்டு மக்களுக்கு கொசுவலை வழங்க பாக்., அரசு முடிவு செய்தது. உலக சுகாதார நிறுவனம் வழங்கிய நிதியை பயன்படுத்தி, இந்தியாவில் இருந்து 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கொசுவலைகள் வாங்க பாக்., திட்டமிட்டுள்ளது.
திட்டம் இல்லை’
ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து 2019ல் ரத்து செய்யப்பட்டது. நம் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நம் அண்டை நாடான பாகிஸ்தான், இந்தியாவுடனான விமான, ரயில் மற்றும் பஸ் போக்குவரத்தை நிறுத்தியது. இந்நிலையில், லாகூரில் நேற்று நிருபர்களிடம் பேசிய பாகிஸ்தான் ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கவாஜா சாத் ரபீக், “இந்தியா – பாகிஸ்தான் இடையே விமான, ரயில் மற்றும் பஸ் போக்குவரத்தை மீண்டும் துவக்கும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement