ஆந்திராவில் இருந்து தஞ்சாவூருக்கு குடும்பமாக வந்து கூடாரம் அமைத்து வாத்து மேய்ப்பு: வாத்துக்களின் எச்சம் உரமாகிறது

வல்லம்: ஆந்திராவில் இருந்து தஞ்சாவூருக்கு குடும்பம், குடும்பமாக வந்து கூடாரம் அமைத்து வாத்துக்களை மேய்க்கின்றனர். இதில் வாத்துகளின் எச்சங்கள் வயலுக்கு இயற்கை உரமாக பயன்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் ராமநாதபுரம், 8.கரம்பை, ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி உட்பட பல பகுதிகளில் குறுவை அறுவடை முடிந்துள்ளது. இந்த வயல்கள் தற்போது சேறும், சகதியுமாய் காணப்படுகிறது. இந்த வயல்களில் தான் ஆயிரக்கணக்கான வாத்துக்கள் “பக்..பக்..” என்ற ஒலியெழுப்பி வயல்களில் காணப்படும் புழு, பூச்சிகள், நத்தைகள், சிதறிக்கிடக்கும் நெல்மணிகள் போன்றவற்றை தங்களின் உணவாக்கி கொள்கின்றன.

கையில் நீளமான கம்புடன் ஹோய்.. ஏய்.. என வித்தியாசமான சத்தத்தில் வாத்து மேய்ப்பவரின் குரலும், சாலையில் கம்பால் தட்டும் ஒலியும் வாத்துக்களை ஒற்றிணைக்கிறது. அந்த சத்தத்துக்கு ஏற்ப உடலையும், தலையையும் ஆட்டிக் கொண்டு ‘பக் பக்’ என சத்தம் கொடுத்துக் கொண்டே வாகனங்களுக்கு இடம் விட்டு ஒதுங்குகின்றன வாத்துக்கள். பெரிதும் சிறிதுமாக ஆயிரக்கணக்கான வாத்துகள் இப்படி அறுவடை முடிந்த வயல்களில் மேய்கின்றன. தஞ்சாவூர் பகுதியில் நெல் அறுவடை முடிந்த பிறகு வயல்வெளிகளில் இது போன்ற காட்சிகள் தற்போது காண கிடைக்கிறது.

வாத்து இறைச்சிக்கு பெரியளவில் கிராக்கி இல்லை. இருப்பினும் வாத்து முட்டைகளுக்கு நல்ல சந்தை வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக கேரளாவில் வாத்து முட்டைகளுக்கு சந்தை வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்த வாத்துக்களுக்கு ஒரே இடத்தில வைத்து தீவனம் இடுவது என்பது பெரிய அளவில் செலவை ஏற்படுத்தும் என்பதால் அறுவடை முடிந்த வயல்களில் சிதறிய நெல்மணிகள், புழுக்கள், பூச்சிகள் வாத்துக்களுக்கு நல்ல இரையாக அமையும். இதற்காக வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான வாத்துக்கள் மேய்ச்சலுக்காக வந்துள்ளன. தற்போது குறுவை அறுவடை முடிந்து அடுத்தகட்டமாக சம்பா சாகுபடிக்கு வயலை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக வயல்களில் நீர் தேக்கி உழுவதற்கு தயார் நிலையில் உள்ளது. ஏற்கனவே சாகுபடி செய்த நெல்மணிகள் வயலுக்குள் சிதறிக் கிடப்பதால் வாத்துக்களுக்கான உணவுகள் இப்பகுதியில் அதிகம் கிடைக்கிறது. இதனால் ஆந்திரா, வேலூர் உட்பட பல பகுதியில் இருந்து குடும்பம் குடும்பமாக ஆயிரக்கணக்கான வாத்துக்களுடன் மேய்ச்சலுக்காக தஞ்சாவூர் பகுதிக்கு வந்துள்ளனர்.

அந்த வகையில் தஞ்சாவூர் அருகே ராமநாதபுரம் ஊராட்சி பகுதியில் அறுவடை முடிந்த வயல்களில் வாத்துக்களை மேய விட்டு இருந்தனர். அவர்களிடம் கேட்டபோது ”முட்டை வியாபாரத்துக்காக மட்டும் தான் நாங்க வாத்து வளர்க்குறோம். ரெண்டரை வயசான பிறகு வாத்துகள் முட்டை விடுறது குறைந்து விடும். அந்த வாத்துகளை மட்டும் கறிக்காக விற்பனை செய்து விடுவோம்.

வாத்துக்களை ஆயிரக்கணக்குல வளர்த்தாத்தான் முட்டைகள் அதிகம் கிடைத்து லாபம் வரும். ஒரே இடத்தில் வைத்து வாத்துகளை வளர்த்து அதற்கு தீவனம் போடுவது என்பது முடியாத காரியம். செலவும் மிக அதிகம். அதனால் ஊர் ஊராக சென்று அறுவடை முடிஞ்ச நெல் வயல்களில் வாத்துக்களை மேய்க்கிறோம். இந்த நிலத்தில் வாத்துக்கு தேவையான தண்ணி, சிதறிக்கிடக்கும் நெல்மணி, புழு, பூச்சின்னு அனைத்தும் இருக்கும்.  நாங்களும் குடும்பத்துடன் வந்து இங்கேயே கூடாரம் அமைத்து தங்கி வாத்துக்களை மேய்ப்போம். இதனால் செலவும் குறைவு. விவசாயிகளுக்கும் வாத்து எச்சங்கள் இயற்கை உரமாக வயலுக்கு கிடைத்து விடும் என்றனர்.

முட்டை வியாபாரத்துக்காக மட்டும் தான் நாங்க வாத்து வளர்க்குறோம். ரெண்டரை  வயசான பிறகு வாத்துகள் முட்டை விடுறது குறைந்து விடும். அந்த வாத்துகளை  மட்டும் கறிக்காக விற்பனை செய்து விடுவோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.