ஆர்.எஸ்.எஸ் தலைவர் தான் தேசத்தந்தை; புகழ்ந்த முஸ்லிம் மதகுரு.. கிடைத்த பரிசு!

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில், டெல்லியில் உள்ள மசூதிக்கு சென்று அங்கு தலைமை மதகுரு உமர் அகமது இல்யாசி என்பவரை சந்தித்து, சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பேசினார்.

மோகன் பகவத்துடன் மூத்த சங்க பணியாளர்கள் கிருஷ்ண கோபால், ராம் லால் மற்றும் இந்திரேஷ் குமார் ஆகியோர் இருந்தனர். மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நெருக்கமான முக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்று இருந்தனர். இந்த சந்திப்பு தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் மோகன் பகவத்தை புகழ்ந்து பேசிய, அகில இந்திய இமாம்களின் அமைப்பு தலைவரான உமர் அகமது இல்யாசி அவர், இந்த நாட்டிற்கு தேச தந்தையை போன்றவர் என, பேசி இருந்தார்.

மேலும், மோகன் பகவத் வருகையில் இருந்து நல்ல செய்தி வரும். நாம் கடவுளை வழிபடும் முறைகள் வேறுபட்டாலும் மனிதநேயம் பெரிய மதம். நாடு முதலில் வரும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்து இருந்தார்.

இந்த பேச்சு பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இல்யாசியின் இந்த பேச்சை தொடர்ந்து அவருக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில் இமாம் தலைவர் உமர் அகமது இலியாசிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக, உமர் அகமது இலியாசி கூறும்போது, ‘இந்திய அரசுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த அச்சுறுத்தல்களுக்கும், நான் இனிமேல் பயப்பட மாட்டேன்.

இங்கிலாந்தில் இருந்து எனக்கு மிரட்டல் வந்தது. இந்த மிரட்டல்களுக்கு எதிராக புகார் கொடுத்து, 3 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா செழிப்படைவதை பார்க்க சகிக்காத தேச விரோத சக்திகள் தான் இது போன்ற மிரட்டல்களை விடுத்து வருகின்றனர்’ என கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.