வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ள படம் ‘வாரிசு’, தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, எஸ்.ஜே.சூர்யா, ஷாம் மற்றும் யோகி பாபு போன்ற பல நட்சத்திரங்கள் சேர்ந்து நடிக்கின்றனர். ‘வாரிசு‘ படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இப்படம் விரைவில் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க போகிறது. வாரிசு படத்திற்கு தமன் இசையமைக்கிறார், விஜய்யுடன் அவர் கூட்டணி சேரும் முதல் படம் இதுவேயாகும். தமன் இசையில் வெளியாகப்போகும் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர், தீபாவளி பண்டிகையையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் ‘யூத்’ படத்தில் ஹிட்டான ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலை தமன் வாரிசு படத்தில் ரீமிக்ஸ் செய்ய இருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின்படி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குத்து பாடலாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது, இதனால் ரசிகர்கள் அனைவரும் இந்த பாடலை கேட்டு மகிழ வெறித்தனமாக காத்துகொண்டு இருக்கின்றனர். ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் சில இசைக்கருவிகளுடன் இசையமைப்பாளர் குழுவினருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் ஆர்வத்தை மென்மேலும் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது.
வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சென்னையில் வாரிசு படத்தின் சில காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வருகிறது, காதல், காமெடி மற்றும் ஆக்ஷன் என எமோஷன் நிறைந்து குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படமாக இது உருவாகி வருகிறது. இந்த படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது. மேலும் தளபதி 67 படத்தின் அறிவிப்பும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.