டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் ஜஸ்பூர் பகுதிக்கு சுரங்க மாஃபியா குற்றவாளியைத் தேடிச் சென்ற உத்தரப் பிரதேச போலீசாருக்கும், உள்ளூர் மக்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 போலீசார் காமடைந்தனர். பெண் ஒருவர் பலியானார்.உயிரிழந்த பெண், ஜஸ்பூர் பகுதி பாஜக பிரமுகர் குர்தாஜ் புல்லரின் மனைவி, குர்ப்ரீத் கவுர் என்பது தெரியவந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்த போலீஸ் குழு ஒன்று ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருக்கும் சுரங்க மாஃபியாவான ஜாஃபர் என்பவரைக் கைது செய்ய உத்தராகண்ட் மாநிலத்தின் ஜஸ்பூருக்கு சென்றது.
ஜாஃபர், குர்தாஜ் புல்லரின் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி குற்றவாளியைத் தேடி ஜாஸ்பூருக்கு சென்ற உத்தரப்பிரதேச போலீஸாருக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.போலீஸாரை உள்ளூர் மக்கள் சுற்றி வளைத்ததால் அங்கு பதற்றம் உருவாகி இரண்டு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.இந்த சண்டையில் குர்தாஜ் புல்லரின் மனைவி குர்ப்ரீத் கவுர் சுடப்பட்டார். அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனால் ஆத்திரம் அடைந்த உள்ளூர் மக்கள் நான்கு போலீஸாரை சிறைப்பிடித்து உத்தராகண்ட் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் மேலும், குர்ப்ரீத் கவுர் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
உத்தரப் பிரதேச போலீஸாரின் வருகை குறித்து உத்தராகண்ட போலீஸாருக்கு தகவல் எதுவும் தெரியாது என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவம் குறித்து குமான் சரக டிஐஜி கூறுகையில்,”உத்தரப்பிரதேச போலீஸார் தகவல் எதுவும் தெரிவிக்காமல் இங்கு வந்துள்ளனர். அவர்கள் சாதாரண உடையில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மீசு கொலை குற்றம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மொரதாபாத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “குற்றவாளியின் தலைக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அவரைத் தேடிச் சென்ற எங்கள் காலவர்கள் குழு அங்கு சென்ற போது அவர்கள் பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டு அவர்களின் ஆயுதங்களும் பறிக்கப்பட்டன” என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று போலீஸார் சுடப்பட்டதாகவும் அதில் ஒருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.