கர்நாடகாவில் கடந்த பல மாதங்களாகவே, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணியத் தடை என்ற கர்நாடக அரசின் உத்தரவுக்கு எதிராகப் பல விவாதங்கள் அரங்கேறிவருகின்றன. இந்த நிலையில், ஹிஜாப் விவாகரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான, உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில், விசாரணை செய்த இரண்டு நீதிபதிகள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக கல்வியமைச்சர் பி.சி.நாகேஷ், `உச்ச நீதிமன்றத்திடம் சிறந்த தீர்ப்பை எதிர்பார்த்தோம்’ எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஹிஜாப் தொடர்பாக ட்விட்டரில், ஹரியானா மாநில அமைச்சர் அனில் விஜ் கருத்து தெரிவித்திருப்பது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.

ஹரியானா மாநில அமைச்சர் அனில் விஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்களைப் பார்த்தாலே ஆசைகொள்ளும் ஆண்கள்தான், பெண்களை ஹிஜாப் அணியக் கட்டாயப்படுத்தினார்கள். ஆண்கள் தங்களின் மனதை வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், தலை முதல் பாதம் வரை மறைக்குமாறு பெண்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இது முற்றிலும் நியாயமற்றது. எனவே ஆண்கள் தங்களின் மனதை வலுப்படுத்த வேண்டும். பெண்கள் ஹிஜாபிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்” எனப் பதிவிட்டிருக்கிறார்.