‘கடந்த ஒன்பது மாதங்களில், பாகிஸ்தானிலிருந்து இந்திய பகுதிக்குள், 191 ‘ட்ரோன்’கள் உள்ளே நுழைந்தன. இவற்றில், ஏழு சுட்டு வீழ்த்தப்பட்டன; பெரும்பாலானவை விரட்டி அடிக்கப்பட்டன’ என மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
நம் அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து, நம் எல்லைக்குள் ஆயுதங்கள், வெடி பொருட்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் ட்ரோன்கள் பறந்து வருவது அன்றாட நிகழ்வாகி இருக்கிறது. இந்த ஊடுருவலை, பாதுகாப்பு படையினர் மிகுந்த கண்காணிப்புடன் கவனித்து, தடுத்து வருகின்றனர்.
இது, உள்நாட்டு பாதுகாப்புக்கான சவால் என்பதால், கடந்த ஜனவரி 1 லிருந்து, செப்டம்பர் 30 வரையில், ட்ரோன்களின் ஊடுருவல் குறித்த பட்டியல், உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
‘இந்த காலகட்டத்தில், பாகிஸ்தானிலிருந்து இந்திய பகுதிக்குள் 191 ட்ரோன்கள் அத்து மீறி நுழைந்துள்ளன. இவற்றில், 20 ட்ரோன்கள் ஜம்மு – காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்தன’ என இப்பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, எல்லைப் பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட்டு ஏழு ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர். இவை பஞ்சாபின் எல்லைப்பகுதிகளில் வீழ்த்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், இந்த தகவல்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. ‘இந்த நடவடிக்கைகள் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றன.
‘எனவே, பாதுகாப்பு படையினர் மிகுந்த கண்காணிப்புடன் இருக்கவும், கடும் பதிலடி தரவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறது’ என, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
– நமது டில்லி நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement