புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பாண்டித்துரையின் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் இன்று 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். இவர் ரூ.1000 கோடி அளவுக்கு, சொத்து குவித்துள்ளது அம்பலமாகி உள்ளது. புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் பாண்டித்துரை(47). இவர் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர். 20 ஆண்டுகளுக்கு முன் இவரது தந்தை மாணிக்கம் நெடுஞ்சாலை துறையில் ரோடு ரோலர் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். பணியின்போது அவர் உயிரிழந்ததை தொடர்ந்து வாரிசு அடிப்படையில் பாண்டித்துரை நெடுஞ்சாலை துறையில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் புதுக்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட அலுவலகத்தில் உதவியாளராக பணி உயர்வு பெற்றார். அப்போது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சாலையோரம் உள்ள மரங்களுக்கு வர்ணம் பூசும் பணியை டெண்டர் எடுத்து கொடுத்து வந்தார். அதிமுக ஆட்சியில் பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் எடுக்க வாய்ப்பு கிடைத்ததால் தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, நெடுஞ்சாலைத்துறையில் அரசு ஒப்பந்ததாரராக பணி செய்ய தொடங்கினார்.
அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், அவருடன் ஏற்பட்ட நெருக்கத்தில், நெடுஞ்சாலை துறையில் சாலையில் பதிக்கக்கூடிய ஒளி பிரதிபலிப்பான், சாலையில் வைக்கக்கூடிய பிரதிபலிப்பு பலகைகள் உள்ளிட்டவைகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தார். குறிப்பாக, தரமான பொருட்களை பயன்படுத்துவோம் என்று ஒப்பந்தம் எடுத்துவிட்டு தரமற்ற சீனா தயாரிப்பு பொருட்களை உபயோகித்துள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கும் அதேபோல் ஓபிஎஸ்சுக்கு நெருக்கமானவர்களுக்கும் ஆதரவாளராக இருந்து அவர்களை பயன்படுத்தி பல்வேறு அரசு ஒப்பந்தத்தை பாண்டித்துரை எடுத்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், மேலும் கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தோட்டம், வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. தற்போது பாண்டித்துரை கோயம்புத்தூரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் பாண்டித்துரை, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையிலும் திருச்சி, கோயமுத்தூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் 10 பேர், புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள “ஹரிவே லயன்ஸ்’’ என்ற பெயரில் இயங்கும் பாண்டித்துரை அலுவலகத்தில் நேற்று காலை 8 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு சொந்தமான பெரியார் நகரில் உள்ள அவரது வீடு, மேலாளர் பீட்டர் வீடு, சிப்காட்டில் உள்ள அவரது தொழிற்சாலை, இரண்டு இடங்களில் உள்ள வீடு என 5 இடங்களில் சோதனை நடைபெற்றது. மற்ற இடங்களில் குறைந்த நேரத்தில் சோதனையை முடித்த வருமான வரித்துறை அதிகாரிகள், பெரியார் நகர் வீடு மற்றும் அலுவலகத்தில் தொடர்ந்து நள்ளிரவு 12 மணி வரை சோதனை நடத்தினர். இதில் கோடிக்கணக்கில் ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கோயம்புத்தூரில் தோப்பு, வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், புதுக்கோட்டையில் அடுக்குமாடி வீடுகள் உள்பட 10க்கும் மேற்பட்ட வீடுகள், 2 வணிக வளாகங்கள் என ரூ.1000 கோடிக்கு மேல் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளது சோதனையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நள்ளிரவு 12 மணிக்கு சோதனையை முடித்துக்கொண்டு புதுக்கோட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கினர். தொடர்ந்து 2வது நாளாக பாண்டித்துரை வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துரை அதிகாரிகள் இன்று காலை 8.30 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் ரூ.5000 கோடி மதிப்புள்ள சாலை போடும் ஒப்பந்தங்களை, தனது உறவினர்களும் பினாமிகளும் நடத்தும் நிறுவனங்களுக்கு அப்போதைய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள சென்னை- சேலம் 8 வழிச்சாலையின் ஒப்பந்தம் கூட எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, எடப்பாடி மற்றும் அவர் பினாமிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் மனு அளித்தார். ரூ.5000 கோடி சாலை ஒப்பந்தத்தில் பாண்டித்துரைக்கு மட்டும் ரூ.400 கோடி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனடிப்படையில், பாண்டித்துரை வீட்டில் தற்போது சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. மேலும் பாண்டித்துரைக்கு தொடர்புடைய இடங்கள், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பாண்டித்துரையின் நண்பர்கள், அவர் மூலம் ஒப்பந்தம் எடுத்து செய்து வருபவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அதிகாரிகள் நாளையும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.