விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பியுமான திருமாவளவனுக்கு எடுக்கப்பட்ட விழா ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், “சினிமா என்னும் கலையை சரியாக நாம் கையாள வேண்டும். அப்படி கையாள தவறும்போதுதான் நம்முடைய அடையாளம் நம்மிடம் இருந்து பறிக்கப்படுகிறது. வள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது,ராஜராஜ சோழனை இந்து அரசனாக குறிப்பிடுவது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். அவரின் இந்தக் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
குறிப்பாக பொன்னியின் செல்வன் படம் வெளியான சமயத்தில் அவர் இப்படி பேசியதால் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்று விவாதத்தையும் கிளப்பியது. ராஜராஜ சோழன் இந்து இல்லாமலா சிவன் கோயிலை கட்டினார் என பாஜக, இந்து முன்னணியினர் கேள்வி எழுப்பினர். அதேசமயம், ராஜராஜ சோழன் காலத்தில் இந்து என்ற மதம் இல்லை சைவம், வைணவம் என்றுதான் இருந்தது என சீமான் உள்ளிட்டோர் பதிலடி கொடுத்தனர்.
இந்தச் சூழலில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய கமல் ஹாசன், “ ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்பது கிடையாது வைணவம், சைவம், சமணம் என்றுதான் இருந்தது. வெள்ளைக்காரர்கள் எப்படி அழைப்பது என்று தெரியாமல் இந்து என்றார்கள். தூத்துக்குடியை Tuticorin என்று சொன்னதுபோல்” என்றார். அதேசமயம், கமல் இந்து மதத்தின் இருப்பை மறுக்கவில்லை என கூறியதாக அவரது நண்பர் விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இருப்பவரும், கவிஞரும், பாடலாசிரியருமான சினேகன்; தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சி உறுப்பினர்கள் செய்துவரும் நலத்திட்ட உதவிகளின் 50ஆவது நாளான நேற்று சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ நல்ல கலைஞன் எந்த பிரிவினைகளுக்கும் சிக்கமாட்டான். அரசியலை சினிமாவாகவும் சினிமாவை அரசியலாகவும் பார்க்காமல்; கலைஞன் கலைஞனாக இருந்தால் எந்த கலைஞனையும் பிரிவினைவாதத்திற்குள் கொண்டு போக முடியாது
ஆரம்பத்திலேயே காஞ்சி பெரியவர் மற்றும் எழுத்தாளர் சோ ஆகியோர் கூறிய கருத்துதான் வெற்றிமாறனின் கருத்து. அந்த காலத்தில் இந்து மதம் என்பது இல்லை. அதன்பின் பண்பட்ட ஒரு பண்பாடு இங்கு சேர்ந்து அதற்கு பெயர் வைத்தார்கள் என்று படித்ததை வெற்றிமாறன் கூறினார்.அது அவருடைய கருத்து” என்றார்.