விளம்பரத்தில் இந்து மத நம்பிக்கை அவமதிப்பா? – அமீர்கானை வேண்டுமென்றே வம்பிழுக்கிறதா பாஜக?

அமீர்கான் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் புதிதாக வெளியாகி உள்ள வங்கி விளம்பரம் ஒன்று இந்து மத நம்பிக்கையை அவமதித்து விட்டதாக புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள்.
திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் இந்து மத நம்பிக்கைகள் புண்படுத்தப்பட்டு விட்டதாக இந்துத்துவா அமைப்புகளும், பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டுவது தொடர் கதையாகிவிட்டது. சில நேரங்களில் போராட்டங்கள் வரை இவை சென்றுவிடுகின்றன. திரைப்படங்களை முடக்கும் அளவிற்கு கூட எதிர்ப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. எதிர்ப்புகள் காரணமாக சில நேரங்களில் சர்ச்சைக்குள்ளான விளம்பரங்கள் நீக்கப்பட்டதும் உண்டு. அந்த வகையில்தான் நடிகர் அமீர்கான் நடித்த விளம்பரம் தொடர்பாக புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளார்கள் இந்துத்துவா அமைப்பினர் மற்றும் பாஜகவினர். 
சமீபத்தில் வெளியாகியிருந்த அந்த வங்கி விளம்பரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர்கான் – நடிகை கியாரா அத்வானி ஆகியோர் புதுமண தம்பதி போல நடித்துள்ளனர். பொதுவாக இந்து மத கலாச்சாரத்தின் படி திருமணமான நிலையில் வீட்டிற்குள் முதன்முதலாக மணப்பெண் தான் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்ற சம்பிராதயம் உள்ளது. ஆனால், இந்த விளம்பரத்தில் அதை மாற்றி மணமகனான அமீர்கான் உள்ளே நுழையும் படி விளம்பரத்தை இயக்கி உள்ளனர். அதேபோல், திருமணம் முடிந்து தன்னுடைய வீட்டில் இருந்து மணமகன் வீட்டிற்கு புறப்படும் நிகழ்வில் மணப்பெண் அழுவது ஒரு இயல்பாக நடக்கும் ஒன்று(அது கட்டாயமில்லை). ஆனால், இந்த விளம்பரத்தி மணப்பெண் அழவில்லை.
இந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் முன் வைத்துதான் அமீர்கான் இந்து மத பாரம்பரியத்தை இழிவுப்படுத்தி விட்டதாகக் கூறி இந்து மத அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சமூக வலைத்தளங்களிலும் அமீர்கான் மற்றும் கியாரா அத்வானியை விமர்சித்து பலர் பதிவிட்டு வருகின்றனர்.

image
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான நரோத்தம் மிஸ்ரா, “இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய விளம்பரங்களில் நடிப்பதை நடிகர் அமீர்கான் தவிர்க்க வேண்டும்” என்றார்.

முன்னதாக காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இயக்கிய இயக்குநர் விவேக் அக்னோஹோத்ரி, அமீர்கானின் விளம்பரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், ‘இந்து மத சடங்கை மாற்ற நீங்கள் யார்?’ என்ற கேள்வியை எழுப்பினார்.
இதெல்லாம் விமர்சனத்திற்கு உரியதா?
உண்மையில் இந்த விளம்பரத்தில் உள்ளது ஒரு ஆரோக்கியமான சிந்தனைதானே. காலம் காலமாக பல்வேறு கட்டுப்பாடுகளை முன் வைத்து நம்முடைய சமுதாயத்தில் பெண்கள் ஒடுக்கப்பட்டு வருகிறார்கள். அது கலாசாரத்தின் பெயரிலே நடைபெற்று வருகிறது. திருமணம் முடிந்து வீட்டிற்கு செல்லும் போது முதல் ஆண் காலை வைத்தால் என்ன? பெண் காலை வைத்தால் என்ன?. இதெல்லாம் விமர்சனத்திற்கு உரிய ஒன்றா?.
பிற்போக்கு தனங்களையும், கலாசாரத்தையும் போட்டு குழப்பிக் கொள்வதாலேயே இப்படியான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது. நம்முடைய கலாசாரத்தில் நல்லவை, தீயவை இரண்டுமே இருக்கும்தானே. நல்லதை எடுத்துக் கொள்ளும், பிற்போக்குத்தனங்களை சீர்திருத்தம் செய்து கொண்டு முன்னேறுவது தானே சரியானதாக இருக்கும். இப்படியான விமர்சனங்கள் முற்போக்கு சிந்தனைக்கு மிகப்பெரிய முட்டுக் கட்டையாக அமைந்துவிடாதா?. உண்மையிலே உள்நோக்கத்துடன் ஒருவர் இந்துமத நம்பிக்கைகளை அவமதிக்கும் நோக்கில் ஒரு படைப்பை உருவாக்கினால் அதனை கேள்விக்குள்ளாக்கலாம் அல்லது எதிர்ப்பு கருத்துக்களை முன் வைக்கலாம். ஆனால், இதுபோன்ற எதிர்ப்புகள் தொடர்வது சமுதாயத்திற்கு ஆபத்தான ஒன்றாகவே போய் முடிந்துவிடும்.  

இதையும் படிக்க: கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தமிழக பெண்… அடையாளம் காண முடியாத அளவுக்கு அழுகிய உடல்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.