ஹிஜாப் தடை… உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன?

கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியலாமா? கூடாதா? என்பதற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து மாணவிகள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா என இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு 10 நாட்களாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பு புதிய குழப்பத்திற்கு வித்திட்டுள்ளது. ஏனெனில் ஹிஜாப் தடை செல்லும் என ஒருவரும், தடை செல்லாது என மற்றொருவரும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

நீதிபதி சுதான்சு துலியா அளித்த தீர்ப்பு:

பெண் குழந்தைகளுக்கு பிரதானமானதாக இருப்பது கல்வி மட்டுமே. அவர்களது வாழ்க்கையை மேலும் உயர்த்துவது எப்படி என்பதை தான் நாம் சிந்திக்க வேண்டும். இந்த கேள்வி தான் என்னுடைய மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஹிஜாப் தடை மூலம் பெண் குழந்தைகளின் வாழ்க்கை மேம்பட்டு விடுமா என்ன? ஹிஜாப் அணிவது என்பது தனிப்பட்ட நபரின் விருப்பமே.

இந்த விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் தவறான பாதையில் வழிநடத்தி சென்றுள்ளது. ஆர்டிக்கிள் 14 மற்றும் 19 ஆகியவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்படுவதை ஏற்க முடியாது.

எனவே பிப்ரவரி 5ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்கிறேன். இந்த விவகாரத்தில் விதிக்கப்பட்ட அனைத்து தடைகளை நீக்கி உத்தரவிடுகிறேன்.

நீதிபதி ஹேமந்த் குப்தா அளித்த தீர்ப்பு:

ஹிஜாப் விவகாரத்தில் மேல்முறையீடு மனுக்கள் தொடர்பாக 11 கேள்விகளை தொடுத்து, அதற்கான பதில்களை வழங்கியுள்ளேன். அவற்றில், வகுப்பறையில் ஒரே மாதிரியான சீருடை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில் மதம் சார்ந்த ஆடைகளை அணிவது என்ன அடிப்படை உரிமையா?

இதற்காக கல்வி நிலையங்கள் அமல்படுத்தியுள்ள சீருடையை தடை விதிக்க பரிந்துரை செய்ய முடியுமா? ஹிஜாப் இஸ்லாமில் கட்டாயம் பின்பற்றியே ஆக வேண்டுமா? இந்த விவகாரம் கூடுதல் அமர்விற்கு மாற்றப்பட வேண்டிய அவசியமிருக்கிறதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இதனைச் சுட்டிக் காட்டி கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக தொடரப்பட்ட 26 மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.

இதனால் கூடுதல் நீதிபதிகளை நியமித்து விசாரிக்க வேண்டும் என்று கோரி தலைமை நீதிபதி யு.யு.லலித் முன்பு சமர்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய நீதிபதி பருண் சின்ஹா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.