சருமப் பராமரிப்பு, கேசப் பராமரிப்பு போன்று உதடுகளையும் தனிப்பட்ட கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டியது அவசியம். உடலில் நீர்ச்சத்து குறைபாடு, மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவை பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மிக முக்கிய பகுதி… உதடுதான். அதிலும் குறிப்பாக உதட்டில் ஏற்படும் வெடிப்பு போன்ற பிரச்னைகள் அழகு தொடர்பானது மட்டுமல்லாமல் வலி, எரிச்சல் போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தும். இதற்கு எளிய முறையில் எப்படி தீர்வு காணலாம் என்பது குறித்து கூறுகிறார் அழகுக்கலை நிபுணர் வினோத் பாமா…
* உதடுகள் மட்டுமல்ல, உடலின் பெரும்பாலான பிரச்னைகளுக்கு நீர்ச்சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம். அதனால் தண்ணீர் அதிகளவு எடுத்துக்கொள்வது உடலுக்கு மிக நல்லது. பல பிரச்னைகள் குறையும்.

* உதடு பராமரிப்புக்கு, சர்க்கரை கொண்டு உதட்டினை அடிக்கடி ஸ்கிரப் செய்ய வேண்டும். உதடு மென்மையாக மாறும்.
* ரோஸ் வாட்டர் கொண்டு உதட்டினை மென்மையாக மசாஜ் செய்யவும். இது உதட்டில் ஈரப்பதத்தை தக்க வைக்கும். கூடவே உதட்டின் கலரையும் மாற்ற உதவும்.
* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து, வறண்ட உதட்டின் மீது தடவி, சில நிமிடங்களுக்குப் பின் தண்ணீர் கொண்டு கழுவவும். இவை சாதாரணமாகவே ப்ளீச்சிங் ஏஜென்டாக செயல்படுவதால் பிங்க் நிறத்தில் உதடுகள் மாற உதவும். வறட்சி நீங்கி ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.
* புதினா இலையினை அரைத்து, அதன் சாற்றினை உதட்டில் தொடர்ந்து அப்ளை செய்து வரும்போது உதட்டின் ஆரோக்கியம் மேம்படும்.
* தினமும் பாதாம் சாப்பிடுவது, அல்லது பாதாம் எண்ணையை உதட்டில் அப்ளை செய்து வருவது ஆரோக்கியமான உதடுகளுக்குக் கைக்கொடுக்கும்.

* அடுத்து முக்கியமானது… லிப்ஸ்டிக் பயன்படுத்தும் முறை. பெரும்பாலோனார் தினமும் கூட லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். இதனால் உதட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம், லிப்ஸ்டிக் பயன்படுத்தும் முன் லிப் பாம் அல்லது மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய பின் சரியான முறையில் க்ளென்ஸர் கொண்டு உதட்டை சுத்தப்படுத்த வேண்டும். பின்பு பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவி வர வேண்டும்.
மேற்சொன்ன பராமரிப்பு முறைகளுடன் சரியான உணவுப் பழக்க வழக்கத்தை மேற்கொள்ளும்போது, உதடுகளின் அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.