‘அண்ணாத்த’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்த படத்தில் படையப்பா படத்திற்கு பிறகு ரஜினியுடன் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்து வருகின்றார். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் நிறைவுபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் – புதுச்சேரி எல்லையை ஒட்டியிருக்கும் அழகிய நத்தம் தென்பெண்ணையாற்று பாலம் அருகே நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
இந்த படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு காரில் சென்றபோது, கடலூர் – புதுச்சேரி எல்லைப் பகுதியான குருவிநத்தம் என்ற இடத்தில் அவரது ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பி, ஆரவாரமான வரவேற்பை அளித்தனர். ரசிகர்களின் வரவேற்பை அடுத்து தனது காரின் கண்ணாடியைத் திறந்து, ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அந்த புகைப்படமும், வீடியோவும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.