‘நாங்கள் செய்திக்காக அரசியல் செய்யவில்லை’ -அதிமுக கடம்பூர் ராஜூ!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் 11.29 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜூ கலந்து கொண்டு புதிய சாலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சட்டமன்ற உறுப்பினருக்கு மாணவர்கள் மலர் தூவி வரவேற்றனர்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில்; அரசு விழாக்களில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அழைக்கக்கூடாது என திமுக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சட்டமன்றத்தில் இது குறித்து பிரச்சனை எழுப்பப்படும். மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களில் அரசியல் காழ்புணர்ச்சி இருக்க கூடாது. இந்த ஆட்சி தவறான முன் உதாரணமாக இருந்து வருகிறது.

எல்லா கட்சித் தலைவர்களும் தங்கள் கட்சி தான் முதன் முதன்மையானது என்று கூறுவார்கள். உண்மையிலே எதிர்க்கட்சி என்றால் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிமுக தான், ஆளுங்கட்சி என்றாலும், எதிர்க்கட்சி என்றாலும் நம்பர் ஒன் அதிமுக தான். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எல்லா கட்சிகளும் தனித்து நின்றால் நாங்களும் தனியாக நிற்க தயார். ஏற்கனவே அதிமுக தனியாக நின்று நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களை பெற்றுள்ளது.

தமிழக அரசியல் உணர்ச்சி, கவர்ச்சியை நோக்கியே செல்கிறது,வளர்ச்சிப்பாதையில் செல்லவில்லை – கார்த்தி சிதம்பரம்

திமுக, தேசிய கட்சிகள் தனித்து நின்றால் அதிமுகவும் தனித்து நிற்க தயார். பாஜக தலைவர் அண்ணாமலை அடிக்கடி மீடியாக்களை சந்தித்து அரசின் குறைபாடுகள் குறித்து பேசி வருகிறார். அது ஆரோக்கியமான விஷயம் தான். ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டும் பொறுப்பு எங்களுக்கு இருப்பது போன்று பாஜகவுக்கும் இருக்கிறது. மத்திய அரசு பொறுப்பில் இருப்பதால் பாஜக பற்றி மீடியாக்கள் மற்றும் செய்தித்தாள்களில் செய்தி வருகிறது.

ஆனால் நாங்கள் செய்திகளுக்காக அரசியல் செய்வது கிடையாது. நாங்கள் மக்கள் பிரச்சினகளை சட்டமன்ற கூட்டத்தொடரில் எடுத்துரைப்போம். அப்போது யார் எதிர்க்கட்சி என்பது தெரியும். ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுவோம். திமுக என்றைக்கு ஆட்சிக்கு வந்தாலும் மமதை மற்றும் ஆணவத்தில் எதிர்க்கட்சிகளை மட்டுமல்ல, மக்களையே தரக்குறைவாக, ஏளனமாக பேசுவதை கண்கூடாக பார்க்கிறோம்.

ஓசி பயணம் என்று கூறிவிட்டு விமர்சனங்கள் இருந்த பின்னர் தற்போது அந்த அமைச்சர் வருத்தம் தெரிவித்து உள்ளார். மக்களின் வரிப்பணத்தில் கொடுப்பதால் அதிமுக ஆட்சியில் இலவச என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை, விலையில்லா பொருட்கள் என்று கூறினோம். அதிமுக கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறுத்தி உள்ளது. நிதி வருவாயை உயர்த்துவதற்கான எந்த அடிப்படை கட்டமைப்பினை திமுக அரசு செய்யவில்லை.

சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியை கூட முழுமையாக தர முடியாமல் பாதி பாதியாக தரக்கூடிய சூழ்நிலை தான் உள்ளது. சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு , பால் விலை உயர்வு என அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுகவின் கடந்த 10 ஆண்டு‌ கால ஆட்சிக் காலத்தில் மூன்று லட்சம் கோடி கடன் வாங்கியதாகவும், திமுகவின் 15 மாத ஆட்சியில் 2 அரை லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர்.

ஆளும் திறமை அதிமுகவிற்கு இருக்கிறதா, திமுகவிற்கு இருக்கிறதா என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. திமுக ஆட்சியில் 2006 முதல் திரைப்படத் தொடருக்கு எவ்வித விருதுகளும் வழங்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் திரைப்பட விருதுகள் வழங்க பயனர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கொரோனா மற்றும் தேர்தல் காரணமாக வழங்க முடியவில்லை. அதிமுக அரசு தேர்ந்தெடுத்தவர்களுக்கு தான் திமுக அரசு வழங்கியுள்ளது.

அதிமுகவில் எவ்வித பிரிவும் இல்லை, ஒரு சிலர் பிரிந்து சென்றுள்ளனர். இது காலங்காலமாக நடப்பது தான். அதிமுகவில் பிளவு கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 இடங்களில் வெற்றி பெறும், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் பிரச்சனை தொடர்பாக சபாநாயகர் எடுக்கும் முடிவை தொடர்ந்து அதிமுக நடவடிக்கை இருக்கும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.