பரங்கிமலை கொலை… அப்சல் குருவையும், சதீஷையும் கம்பேர் செய்தாரா விஜய் ஆண்டனி?

சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(23). இவர் மீது ஏற்கனவே ஆர்1 மாம்பலம் காவல் நிலையத்திலும், பரங்கிமலை காவல் நிலையத்திலும் வழக்குகள் இருக்கின்றன. இந்தச் சூழலில் சதீஷ் அதே பகுதியைச் சேர்ந்த பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்துவந்திருக்கிறார். ஆனால் சதீஷின் காதலை மாணவி ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் தொடர்ந்து அந்த மாணவியை பின் தொடர்ந்து தன் காதலை ஏற்கும்படி நச்சரித்துள்ளார். அப்படி நேற்றும் அவர் மாணவியை நச்சரித்துள்ளார். வழக்கம்போல் காதலை ஏற்க மறுத்த மாணவியிடம் சதீஷ் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில்,பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் வந்துகொண்டிருந்தபோது மாணவியை சதீஷ் தண்டவாளத்தில் தள்ளிவிட்டார்.

இதில் சம்பவ இடத்திலேயே மாணவி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே நுங்கம்பாக்கத்தில் ஸ்வாதி என்ற பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் போலவே இந்த சம்பவமும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்ட மாணவியின் தந்தையும் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். அது மேலும் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த இரண்டு உயிரிழப்புகளுக்கும் காரணமான சதீஷை உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டுமென பலர் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

இந்நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில், “சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த ட்வீட் வைரலாகியுள்ளது. 

அதேசமயம், இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2001ஆம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் அப்சல் குரு கைது செய்யப்பட்டார். அவருக்கு தூக்கு தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 2013ஆம் ஆண்டு தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எந்த தீவிரவாத இயக்கத்திலும் அப்சல் குருவுக்கு தொடர்பில்லை என்ற வாதமும், அப்சல் குரு விஷயத்தில் நீதி மீறப்பட்டிருப்பதாகவும் இன்றளவும் வாதங்கள் வைக்கப்படுவருவது குறிப்பிடத்தக்கது.

 

நிலைமை இப்படி இருக்க 10 ஆண்டுகள் கழித்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக விஜய் ஆண்டனி கூறுவது அப்சல் குருவைத்தான். ஆனால் அப்சல் குரு மீது தவறில்லை என்று வாதம் வைக்கப்படும் சூழலில், பட்டவர்த்தனமாக கொலை செய்த பரங்கிமலை சதீஷையும் அவர் எப்படி ஒப்பிடலாம் எனவும் ஒருதரப்பினர் கேள்வி எழுப்பிவருகின்றனர். முன்னதாக, கொலை செய்துவிட்டு தப்பியோடிய சதீஷ் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.