சூப்பர் சிங்கரில் போட்டியாளராக வந்தவர் பூவையார், தன்னுடைய பாடல் மற்றும் சுட்டிதனத்தால் ரசிகர்களை வெகு சீக்கிரமே கவர்ந்தார். அவர் போட்டியாளராக வந்த முதல் நாள் தொகுப்பாளினி பிரியங்காவை கலாய்த்த வீடியோ யூ டியூப்பில் இன்றும் அதிகமானோரால் ரசிக்கப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த சீசனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பூவையார், 3வது இடத்தை பிடித்தார். அந்த சீசனுக்குப் பிறகு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அட்லீ இயக்கத்தில் உருவான பிகில் திரைப்படத்தில் பாடல் ஒன்றை பாடிய பூவையார், படத்திலும் நடித்தார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்தார். படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் வெளிநாடு நிகழ்ச்சி என பிஸியான பூவையார் புதிதாக கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார் வாங்கியிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் அவர், கார் வாங்கியதை மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
மக்களின் ஆதரவுடன் கார் வாங்கியிருப்பதாக தெரிவித்திருக்கும் அவர், இப்போது கொடுக்கும் ஆதரவை போல் வரும் காலங்களிலும் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். பூவையார் வாங்கியிருக்கும் காரின் பெயர் டாடா நிறுவனத்தின் டாடா பஞ்ச். இந்த மாடலின் பேஸிக் வேரியண்ட் 5.93 லட்சத்தில் இருந்து, ஹை வேரியண்ட் 9.49 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 14 வயதாகும் பூவையார் தன்னுடைய திறமையால் உழைத்து இந்த காரை வாங்கியிருப்பதற்கு, பாராட்டும் வாழ்த்தும் குவிந்து வருகிறது.