திருவள்ளூர் மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது டிவி விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே முஸ்லிம் நகர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சதாம் உசேன். இவரது மனைவி சமிம். இவர்களது 2 வயது ஆண் குழந்தை சூபியன் நேற்றிரவு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது வீட்டில் இருந்தவர்கள் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில், விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென டிவி ஸ்டாண்டை பிடித்து இழுத்ததில் எதிர்பாராத விதமாக டிவி குழந்தையின் மீது விழுந்துள்ளது. இதனால் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனே பெற்றோர் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.