பெங்களூரு: இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுவரும் ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் ராம்புராவில் 37வது நாளாக தமது பயணத்தை தொடர்ந்து வருகிறார். கடந்த மாதம் 7ம் தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில், பாதயாத்திரையை தொடங்கிய அவர், கேரளாவை தொடர்ந்து தற்போது கர்நாடகத்தில் மேற்கொண்டு வருகிறார். அவருடன் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.
மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ராகுல் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் தொண்டர்கள், மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். நேற்றைய பாத யாத்திரையின்போது, ராகுல் காந்தி பெண்கள், விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடினார். ராகுல் காந்தியுடன் திருநங்கைகளும் கலந்து கொண்டனர். சில இடங்களில் ராகுல் காந்திக்கு பெண் குழந்தைகள் பூரண கும்ப மரியாதை வழங்கினர்.
குறிப்பாக விவசாயிகளின் தோட்டத்திற்கே சென்ற ராகுல் காந்தி அங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அந்த குறைகளை போக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். மக்களிடம் நேரடித் தொடர்பில் இருக்க அச்சமின்றி ராகுல் காந்தி மேற்கொண்ட இந்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பாஜக மோடி அரசின் தோல்வி, வெறுப்பு அரசியலுக்கு எதிரான குரல் எனப் பல வியூகங்களுடன் காங்கிரஸ் யாத்திரையை முன்னெடுத்துள்ளது.