உனா: இமாச்சல பிரதேசத்தில் நாட்டின் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை பிரதமர் மோடி நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் கலந்து கொண்டு, வந்தே பாரத் ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். வந்தே பாரத்தின் 4வது ரயிலான இது, முந்தைய 3 ரயில்களை காட்டிலும் மேம்பட்ட தயாரிப்பாகும். 52 நொடிகளில் மணிக்கு 100 கிமீ. வேகத்தை எட்டும் திறன் கொண்டது. தொடர்ந்து உனாவில், கடந்த 2017ம் ஆண்டில் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தையும் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர், தொடர்ந்து இந்திரா காந்தி மைதானத்தில் அவர் பேசியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கட்சிக்கு வாக்களித்து ஆட்சிக்கு கொண்டு வரும் முறைக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். புதிய இந்தியா சவால்களை எதிர்கொண்டு வேகமாக வளர்ந்து வருகின்றது. ஏற்கனவே இருந்த ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உங்கள் தேவைகளை புரிந்து கொள்வதற்கு தவறி விட்டன. பாஜ அரசு மக்கள் தேவைகளை மட்டும் நிறைவேற்றாமல் முழு பலத்துடன் பணியாற்றி வருகிறது. தீபாவளிக்கு முன்னதாக பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பரிசுகளை உங்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தெய்வ பூமியாகிய இமாச்சலில் முந்தைய அரசுகள் வளர்ச்சி இடைவெளியை நிரப்புவதற்கு எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் இந்த இடைவெளியை நிரப்பியது மட்டுமல்லாமல் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.