இந்தியாவிn சிறந்த கைவினைப் பொருளாக தஞ்சாவூர் கலைத் தட்டு தேர்வு

தஞ்சாவூர்: மத்திய அரசு இணையதளம் மூலம் நடத்திய பொது வாக்கெடுப்பில், இந்தியாவின் சிறந்த கைவினைப் பொருளாக தஞ்சாவூர் கலைத் தட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் கைவினைக் கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில், இந்தியாவில் சிறந்த கைவினைப் பொருட்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஒரு மாத காலமாக பொது வாக்கெடுப்பை இணையதளம் மூலம் நடத்தியது. இந்தப் போட்டியில் இந்தியாவில் புவிசார் குறியீடு பதிவு பெற்ற 475 பொருட்கள் பங்கு பெற்றன. இதில், கைவினைப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், இயற்கைப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என ஐந்து வகையான பொருட்கள் இடம்பெற்றது.

இதில் அதிக வாக்குகளைப் பெற்று கைவினை பொருளுக்கான பிரிவில் தஞ்சாவூர் கலைத்தட்டு முதலிடத்தை பெற்றுள்ளது.
இதையடுத்து கைவினைப் பொருட்களுக்கான மேம்பாட்டு அமைச்சகத்திடம் அதற்கான சான்றிதழை மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவர் மற்றும் புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்களின் மேற்பார்வை அலுவலர் ப.சஞ்சய்காந்தி தஞ்சாவூரில் இன்று கூறியதாவது: தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னர் காலத்தில் இந்த கலைத் தட்டு வடிவமைக்கப்பட்டது. தஞ்சாவூரில் உள்ள கைவினைக் கலைஞர்களின் கை வண்ணத்தில் இந்த தட்டு உருவாக்கப்படுகிறது. தஞ்சாவூரில் தற்போது 250 பேர் இந்த கலைத் தட்டுகளை உற்பத்தி செய்து தஞ்சாவூரின் புகழை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றனர்.

கலைநயமிக்க தஞ்சாவூர் கலைத் தட்டுக்கு 2006-ம் ஆண்டு புவிசார் குறியீடு பதிவுக்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2007 புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்தது. இதையடுத்து சுமார் 200க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பத்து பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதில், தஞ்சாவூர் கலைத் தட்டு தேசிய அளவில் சிறந்த கைவினைப் பொருளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது, தஞ்சாவூர் கைவினைக் கலைஞர்களுக்கு கிடைத்த பாராட்டும், கவுரவமுமாகும் என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.