புதுடில்லி :’உலக முதலாளிகள் தினம்’ இன்று கொண்டாடப்படுவதை அடுத்து, வேலைவாய்ப்புகளுக்கான ‘நவுக்ரி டாட் காம்’ நிறுவனம், முதலாளிகளுக்கும், ஊழியர்களுக்குமான உறவு குறித்து அறிந்து கொள்ள, ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
ஒரு நிறுவனத்துக்குள், மேற்கொண்டு வளர்ச்சியை எட்ட வாய்ப்பிருக்கும்பட்சத்தில், ஊழியர்கள், அந்த நிறுவனத்திலேயே தொடர விரும்புகின்றனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் 41 சதவீதம் பேர், வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாததால், இதற்கு முன் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து வெளியேறியதாக கூறியுள்ளனர்.
மேலும், நிறுவன கொள்கைகள், மோசமான பணி கலாசாரம் ஆகியவையும் முந்தைய நிறுவனத்தை விட்டு வெளியேற முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
கிட்டத்தட்ட 33 சதவீதம் பேர், மோசமான முதலாளிகளால் வேலையை உதறிவிட்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். 36 சதவீதம் பேர், நிர்வாகிகள் தங்களுக்கு கீழ் பணியாற்றுபவர்களிடம், ஒருவழிப் பாதை தகவல் பரிமாற்றத்தை மட்டுமே கடைப்பிடிப்பதாக தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான ஊழியர்கள் வேலை – வாழ்க்கை இரண்டையும் ‘பேலன்ஸ்’ செய்வதில் கவனம் செலுத்தும் முதலாளிகளையே விரும்புகின்றனர்.
மற்றொரு முக்கியமான விஷயம், இந்திய ஊழியர்கள் ஆண் முதலாளிகளையே அதிகம் விரும்புகின்றனர். திறந்த மனதுடன் இருப்பது, எளிதில் அணுகக்கூடியவர்களாக இருப்பது ஆகியவை, ஆண் முதலாளிகளை அதிகம் விரும்ப காரணமாக அமைந்துள்ளது.
வேலை – வாழ்க்கை இரண்டையும் பேலன்ஸ் செய்வதை மேம்படுத்துவது, தனக்கு கீழ் பணிபுரிபவர்களை மரியாதையுடன் நடத்துவது ஆகியவை, பெண் முதலாளிகளை சிறந்தவர்களாக கருத வைப்பதாகவும், ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement