அன்காரா: துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் நடந்த தீ விபத்தில் 40 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து துருக்கி எரிபொருள் அமைச்சர் ஃபாத்தியா டான்மெஸ் கூறும்போது, “வடக்கில் ஒரு சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 350 மீட்டர் தூரத்திற்கு பெரு வெடிப்பு கிளம்பியது. தீ விபத்து தொடர்ந்து தொழிலாளர்கள் திரளாக ஓடிச் சென்றனர். இந்த தீ விபத்தில் 40 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர். தொடர்ந்து தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது, “உயிர் சேதம் இனியும் அதிகரிக்காது. மீட்கப்படும் தொழிலாளர்கள் இனி உயிருடன் இருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சுரங்கத்திற்கு வெளியே தொழிலாளர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் காத்திரும் காட்சிகள் துருக்கி மக்களை நிலைகுலையச் செய்துள்ளது.இந்த தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். துருக்கியில் 2014 ஆம் ஆண்டு, நடந்த தீ விபத்தில் 301 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.