நந்திவர்மன் – சோழர்களை தொடர்ந்து பல்லவர்கள் வருகிறார்கள்

பொன்னியின் செல்வனுக்கு பிறகு தமிழகம் முழுக்க சோழர்கள் பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. இதை தொடர்ந்து அடுத்து வருகிறது பல்லவர்கள் கதை. ஏ.கே பிலிம் பேக்டரி சார்பில் அருண்குமார் தயாரித்திருக்கும் இந்த படத்தில் 'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தில் நடித்த சுரேஷ் ரவி நாயகனாக நடித்திருக்கிறார். ஆஷா கவுடா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அம்பானி சங்கர், முல்லை கோதண்டம், மீசை ராஜேந்திரன், அசுரன் அப்பு, பொம்மி ராஜன், ஜே.எஸ்.கே.கோபி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

மரகத நாணயம், ராட்சசன், புரூஸ்லி ஆகிய படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், 'கன்னி மாடம்' படத்தில் துணை இயக்குநராகவும் பணியாற்றிய பெருமாள் வரதன், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து 'நந்திவர்மன்' படத்தை இயக்கியிருக்கிறார்.

படம் பற்றி அவர் கூறியதாவது : ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நந்திவர்மன் சூழ்ச்சியினால் கொலை செய்யப்படுகிறார். அப்போது நடக்கும் போரில் அவர் வாழ்ந்த ஊரே பூமிக்கு அடியில் புதைந்து விடுகிறது. அந்த சம்பவத்தில் இருந்து, அந்த ஊரில் 6 மணிக்கு மேல் பல்வேறு அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாக ஒரு நம்பிக்கை இருந்து வருவதால், தற்போதைய காலக்கட்டத்திலும் அந்த ஊரில் வசிக்கும் மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள்.

இதற்கிடையே, அந்த ஊரில் புதைந்த நந்திவர்மனின் இடத்தை கண்டுபிடிப்பதற்காக தொல்லியல் துறையினர் வருகிறார்கள். அவர்களில் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். அதன் பின்னணி என்ன? என்பதை சுவாரஸ்யமான வரலாற்று கதையுடன், தற்போதைய காலக்கட்டத்துக்கு ஏற்ற வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகி உள்ளது.

செஞ்சிகோட்டைக்கு ஒரு முறை சென்றிருந்த போது, அப்பகுதியில் உள்ள ஒரு பெரியவர் அங்கு நடக்கும் சில அமானுஷ்ய விஷயங்கள் பற்றி கூறினார். அதை கேட்கவே வியப்பாக இருந்தது. பிறகு மறுநாள் அதே இடத்திற்கு நான் சென்றேன், அப்போது மற்றொருவர் அதே விஷயங்களை சொன்னார். இப்படி அப்பகுதியில் இருக்கும் பலர் அங்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் குறித்து சொன்னார்கள். அப்போது அங்கு யார் ஆட்சி செய்தது என்று விசாரித்ததில், பல்லவ மன்னர்கள் தான் அப்பகுதியை ஆண்டதாக சொன்னார்கள்.

பிறகு தான் பல்லவர்கள் பற்றியும், அங்கு நிலவும் அமானுஷ்ய விஷயங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது ஒரு ஐந்து பல்லவ மன்னர்களின் பெயர்கள் தெரிய வந்தது, அதில் நந்திவர்மன் முக்கியமானவராக இருந்ததால் அவருடைய பெயரை தலைப்பாக வைத்துவிட்டேன். அதுமட்டும் அல்ல, செஞ்சிகோட்டையில் நிலவும் அமானுஷ்ய விஷயங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்ட போது, இப்போதும் அங்குள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் யாராலும் செல்ல முடியாது. வழி இருக்கிறது, அது நமக்கும் தெரிகிறது, ஆனால் அங்கு நம்மால் செல்ல முடியாது.

வெறும் அமானுஷ்ய விஷயங்களை மட்டும் சொல்லாமல் பல்லவர்களின் பெருமைகள் பற்றியும் படத்தில் சொல்லியிருக்கிறோம். பாண்டிச்சேரி கடற்கரையில் சில தூண்கள் இருக்கும், அவை செஞ்சி கோட்டையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட தூண்களாகும். பல்லவர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன, அவற்றில் அந்த தூண்களும் ஒன்றாகும். இந்தியாவிலேயே முதன்மை சுற்றுலாத்தலமாக மகாபலிபுரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை உருவாக்கிய பல்லவர்கள் பற்றியும், அவர்களுடைய பெருமைகள் பற்றியும் இதுவரை சொல்லாத பல தகவல்களை இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம்.

ஐந்து நிமிடம் பல்லவர்களின் வரலாற்றை 2டி அனிமேஷன் மூலம் சொல்கிறோம். அதை தொடர்ந்து தொல்லியல்துறையினர் ஒரு கிராமத்தில் நந்திவர்மன் வாழ்ந்த இடத்தை தேடி செல்கிறார்கள். அப்போது அவர்களுக்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்களும் அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களில் பல்லவர்கள் பற்றிய பல ரகசியங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.