'பாஜகவை ஓட ஓட விரட்டியடிப்போம்… அடுத்து டெல்லியில்தான் போராட்டம்' – முஷ்டியை முறுக்கும் உதயநிதி!

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழியை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியும் , பல்வேறு படிப்புகளுக்கு இந்தியளவில் ஒரே நுழைவுத்தேர்வு நடத்துவதைக் கண்டித்தும் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (அக். 15) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசுக்கு எதிராக திமுகவினர் கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

‘எதிர்கால தலைவர் உதயநிதி’

மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் உரையாற்றினார். ‘திமுகவின் எதிர்கால தலைவரே’ என உதயநிதியை புகழந்து தயாநிதி மாறன் உரையை தொடங்கினர். “மோடிக்கும், அமித் ஷாவிக்கும் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் தமிழ் உணர்வை வெளிக்கொண்டு வர உதவி இருக்கிறீர்கள். மோடிக்கு என்ன தாய்மொழி இந்தி மொழியா… அவர் குஜராத்தி தானே” என்று விமர்சனம் செய்தார்.

“2024 தேர்தலை மையப்படுத்தி மத்திய அரசு இந்தியை திணித்து வருகிறது. ஐஐடியில் இந்தியை கொண்டு வந்து பாருங்கள், அவா உங்களை இந்தியை கொண்டு வர விட மாட்டார்கள். மத்திய அரசின் பருப்பு தமிழகத்தில் வேகாது” என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

‘ஒன்றிய பிரதமர் என்றே சொல்வோம்’

அவரை தொடர்ந்து, ஆர்ப்பாட்ட மேடையில் உதயநிதி பேசியதாவது,”தமிழ்நாட்டின் மொழி , கல்வி உரிமையை பறிக்கும் பாசிச அரசாக பாஜக இருக்கிறது. ஒன்றியம் என்று சொன்னால் பிரதமருக்கு கோபம் வருகிறது. எனவே ஒன்றிய பிரதமர் என்றே சொல்வோம். பிரதமரே இங்கு அதிமுக ஆட்சி நடக்கவில்லை ,  தற்போது முதலமைச்சர் பன்னீர்செல்வமோ , பழனிசாமியோ அல்ல. தமிழகத்தை ஆள்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இந்தி திணிப்புக்கு எதிரான எங்கள்  ஆர்ப்பாட்டம், போராட்டமாக மாறுமா என்பது பாஜக கையில்தான் இருக்கிறது. இந்தி திணிப்பு எதிர்ப்பை ஒருபோதும் திமுகவினர் விட்டுக்கொடுக்க மாட்டோம். 

தமிழகத்தில் இந்தியை எந்த வழியில் கொண்டுவர நினைத்தாலும் நாங்கள் சொல்லும் ஒரே வார்த்தை ‘இந்தி தெரியாது போடா..’ மூன்று மொழிப்போரை திமுக சந்தித்தது. கடைசியாக நடந்த மொழிப்போரில் மாணவர் அணியினர் தீவிரமாக பங்கேற்றனர். மாணவர் அணி , இளைஞர் அணியினர்  தீவிரமாக மீண்டும் போராடி இந்தி எதிர்ப்பு போரில் வெற்றி பெறுவோம். இந்தி திணிப்பை கைவிடாவிட்டால் சென்னையில் மட்டுமல்ல, டெல்லிக்கும் வந்து பிரதமர் அலுவலகம் முன்பு போராடுவோம். 

அண்ணா , கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் மேற்கு வங்கத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் அண்மையில் நடைபெற்றது.  2019 நாடாளுமன்ற தேர்தலை போல 2024ஆம் ஆண்டு வரும்  தேர்தலிலும் பாஜகவை தமிழகத்தில் ஓட ஓட விரட்டி அடிப்போம். 2024 தேர்தல் பிராசரத்திற்கு சிறந்த தொடக்கமாக இந்த போராட்டம் அமைந்துள்ளது” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.