தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். சித்திரம்பேசுதடி படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்த அவர், தன்னுடைய ஒவ்வொரு படங்களுக்கும் வித்தியாசமான கதைக்களத்தை அமைத்து அதனை வணிகரீதியாகவும் வெற்றி பெற வைத்தவர். மிஷ்கினின் கதைக்களத்தை ரசிப்பதற்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே படம் பெரும் வெற்றியை பெற்றது. நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு மற்றும் துப்பறிவாளன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது ஆண்டிரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கியிருக்கிறார். ஏற்கனவே டிரெய்லர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த வகையில், இயக்குநர் மிஷ்கின் முதல்முறையாக இசையமைக்கும் ‘டெவில்’ படத்தின் படப்படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை மிஷ்கினின் இளைய சகோதரர் ஆதித்யா இயக்கியுள்ளார். இதற்கு முன்பு இயக்குநர்கள் மிஷ்கின், ராம் நடிப்பில் ‘சவரக்கத்தி’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகும், இப்படம் அறிவிக்கப்பட்ட போதே, ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியது. ரசிகர்களை இருக்கை நுணியில் கட்டிப்போடும் புதுமையான திரில்லராக ‘டெவில்’ திரைப்படம் உருவாகியுள்ளதாக படக்குழுவினர் உறுதியளிக்கின்றனர்.
மாருதி பிலிம்ஸ் ஆர்.இராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி சார்பில் ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ பி.ஞானசேகர் தயாரிக்கும் திரைப்படம் ‘டெவில்’ திரைப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.