மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு, அக்.28 – 30ம் தேதி வரை நடக்கும் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி விழாவுக்கு முன்பாக தங்கக்கவசம் அணிவிப்பது வழக்கம். பின்னர் தங்கக்கவசம் மதுரை அண்ணா நகர் வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்கப்படும். அதிமுக பொருளாளர் கையெழுத்திட்டு இந்த தங்கக்கவசத்தை பெற்றுத் தருவது வழக்கம். தற்போது யார் பெற்று தருவது என, அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நேற்று முன்தினம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு நேரில் சென்ற இபிஎஸ் அணியினர், தேவர் நினைவிட நிர்வாகி காந்தி மீனாளிடம் ஆதரவு கோரினர்.
நேற்று காலை மதுரை அண்ணா நகரில் உள்ள அரசு வங்கிக்கு ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த எம்பி தர்மர் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்று வங்கி அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து வங்கி அலுவலர்கள் கூறும்போது, ‘‘அக்.25ல் தங்கக்கவசத்தை உரியவரிடம் வழங்க வேண்டும். தேவர் ஜெயந்திக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. இதுவரை தங்கக்கவசத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வங்கி தலைமை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. அவர்கள் தெரிவிப்பவரிடம் ஒப்படைக்கப்படும்’’ என்றனர். கடந்த முறை இதேபோல் பிரச்னை வந்தபோது, மதுரை கலெக்டரிடம் வங்கி நிர்வாகம் தங்கக்கவச்தை ஒப்படைத்தது. இதேபோல் இம்முறையும் மதுரை, ராமநாதபுரம் கலெக்டர்களிடம் தங்கக்கவசத்தை ஒப்படைக்கும்படி பலரும் கோரியுள்ளனர்.