வானத்தை பார்த்து எச்சில் துப்பாதீர்கள் அண்ணாமலை – கமலுக்காக கோதாவில் இறங்கிய சினேகன்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி கொடுத்து அக்கட்சியின் நிர்வாகி கவிஞர் சினேகன் பேசுகையில், “அண்ணாமலை சார் எங்க தலைவர் அமெரிக்காவில் அரசியல் பேசுவதாக சொல்லியிருக்கிறீர்கள். அவர் லாஸ் ஏஞ்சல்சிற்கு சொந்த காசில் சென்றார். நீங்கள் எந்த பணத்தில் அமெரிக்கா சென்றிருந்தீர்கள் என எங்களுக்கு தெரியாது. அவர் அமெரிக்காவுல இருந்து அரசியல் பேசுறார்னா இப்போ நீங்க எங்க இருந்து பேசுறீங்க? லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்காவுல இருக்குன்னா. கலிஃபோர்னியா கரூருக்கு பக்கத்துலயா இருக்கு? அப்படி இல்லை அல்லவா?

யார் வரலாறு பேசினாலும் அமைதியாக இருக்கிறீர்கள். நாங்கள் வரலாறு பேசினால் மட்டும் ஏன் இந்த ஆட்டம் ஆடுகிறீர்கள். அரசியலை விட்டுவிட்டு தொழிலுக்கு சென்றுவிட்டார் என்கிறீர்கள். நீங்களும்தான் ஒருமுறை சொல்லி இருக்கிறீர்கள். அரசியல் சரியில்லை என்றால் நான் ஆடு மாடு மேய்க்க போய்விடுவேன் என்று. அவர் அரசியலும் செய்கிறார். தொழிலையும் பார்க்கிறார். காரணம், அரசியல் கட்சி நடத்துவதற்கு பணம் தேவைப்படுகிறது. 

உங்களுக்கு கொட்டிக்கொடுப்பதுபோல மேலிருந்தும், கீழிருந்தும் கருப்பாகவும், வெள்ளையாகவும் கொட்டிக் கொடுக்க எங்களுக்கு யாரும் இல்லை. அப்படி கொடுத்தாலும் நாங்கள் வாங்குபவர்கள் அல்ல. எனவேதான் தொழிலையும் பார்க்கிறோம். அரசியலும் செய்கிறோம். இனியாவது ஒருவரை விமர்சனம் செய்வதற்கு முன்பு, பண்போடு பகுத்தாய்ந்து பேசுங்கள். அதுதான் படித்தவர்களுக்கு நல்லது. ஆகாயத்தை பார்த்து எச்சில் துப்ப ஆசைப்படாதீர்கள். அது உங்கள் முகத்தில்தான் விழும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.