கோலிவுட் ஸ்பைடர்: வெற்றி மாறனைச் சந்தித்த சிம்பு; `வாரிசு' விஜய்யின் அடுத்த முடிவு!

கோலிவுட் ஸ்பைடர்

* முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு விழா எடுக்க நடிகர் சங்கம் சார்பில் முயற்சிக்கிறார் விஷால். இன்னும் அந்தச் செய்தி ஸ்டாலின் காதுக்குச் செல்லாமல் உள்ளேயே காய்நகர்த்தி வேலை செய்து வருகிறார்கள். சின்னவரிடம் கேட்டதற்கு, `இதில் நான் தலையிட மாட்டேன்!’ என்று சொல்லிவிட்டாராம். நீங்களே அவரைச் சந்தித்து, தலைவர் ஓ.கே சொல்லிவிட்டால் உங்களோடு ஒரு ஆளாக வருகிறேன்!’ என்று கறாராகச் சொல்லிவிட்டாராம். ஜனவரியில் ஸ்டாலின் சம்மதித்தால் பெரிய விழாவாக அவருக்கு பாராட்டு விழா நடக்கும் என்று தெரிகிறது. அப்பா மாதிரி விழா விரும்பி இல்லையென்பதால் விழா நடைபெறுவதும் சந்தேகம் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.

வாரிசு விஜய்

* `வாரிசு’ படத்தை முடித்துவிட்டு விஜய் தன் குடும்பத்தோடு வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருக்கிறார். முதலில் அமெரிக்கா செல்வதுடன் அங்கே 15 நாட்கள் ரிலாக்ஸ் ட்ரிப். அதன்பிறகு லண்டன் செல்கிறார். அங்கே அவரின் மாமனார் வீட்டில் இரண்டு வாரங்கள் செலவழிக்கத்திட்டமாம். அதற்குள் இரண்டு மூன்று கதைகளைத் தொடர்ச்சியாக கேட்டு தயாரிப்பாளர்களை முடிவுசெய்துவிட்டு செல்லப் போகிறார். இதில் மாமனார் வீட்டில் வைத்து அவருக்கும் அப்பா எஸ்.ஏ.சி.க்குமான சமரசம் பேசப்படும் என்று சொல்கிறார்கள். விஜய்யின் அம்மா உருக்கமாக கேட்டுக் கொண்டதன் பேரில் லண்டன் சம்பந்தி இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார் என்கிறார்கள்.

* `பத்து தல’ படத்தை முடித்துக் கொடுப்பதில் மும்முரமாகிவிட்டார் சிம்பு. தினமும் காலை ஆறு மணிக்கு கேமராமேன், டைரக்டர் வரும்போதே வந்து நின்று விடுகிறாராம் அடுத்து இரண்டு, மூன்று புதுப்படங்களுக்கு ஏற்பாடுகள், துவக்க விழா நடக்கப் போவதால் உடனே படத்தை முடித்துக் கொடுப்பதில் ஆர்வமாக இருக்கிறார். சமீபத்தில் வெற்றி மாறனோடு நடந்த சந்திப்பு அவரை உற்சாகப்படுத்தியிருக்கிறது. அவரோடு சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்கிற கனவும் நிறைவேற வாய்ப்பிருக்கிறது என்கின்றனர். இதற்கிடையில் கௌதம் ‘வெந்து தணிந்தது காடு’ இரண்டாவது பாகத்திற்கு உழைத்துக் கொண்டிருக்கிறார்.

சிம்பு

* விக்ரமின் மகன் துருவ் இப்போதைக்கு படங்களில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார். அதாவது இரண்டு கதையாவது ஃபைனல் செய்துவிட்டு பிறகு ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தொடங்கலாம் என்ற எண்ணமாம். ஆனால், சின்ன மாறுதல். ‘இந்த தடவை இந்தப் படத்தை செய்யலாம்’ என்று முடிவெடுப்பது அப்பா விக்ரம் இல்லையாம். மகன்தானாம். அப்போதுதான் படம் நடிப்பதில் நல்லது கெட்டது புரியும் எனவும் விக்ரம் சொல்லிவிட்டாராம். இப்போது துருவ், தீவிரமாக கதை கேட்டு வருகிறார். விரைவில் புது காம்பினேஷனில் படம் எதிர்பார்க்கலாம்.

* பல படங்களை வாங்கி வெளியிடும் பிரபல நிறுவனம் பற்றி மறுபடியும் புகார் கிளம்பியிருக்கிறது. அவர்கள் கேட்கும் கமிஷன் மிக அதிகமாக இருக்கிறதாம். அதிலேயே படத்தின் 30% லாபம் போய்விடுகிறதாம். அதனால்தான் மணிரத்னம் அதிகப்படியான கமிஷனுக்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். அப்படியும் எல்லோரும் ஒத்துக் கொள்வதற்கு காரணம் கமிஷன் போக மீதி பணம் கச்சிதமாக தயாரிப்பாளருக்கு வந்து சேர்ந்து விடுகிறதாம். தியேட்டர்காரர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கவில்லை என்பதால் அவர்களும் வருத்தத்தில் இருக்கிறார்கள். மெல்ல மெல்ல இந்த எதிர்ப்பு பெருகும் என்கிறார்கள். இதைத் தணிப்பதற்காகவே சில சலுகைகளை அறிவித்து விழா ஒன்று நடத்தப்பட்டதாம். அதில், நடிகர்கள் எவ்வளவு வேலை இருந்தாலும் பட புரோமோஷனுக்கு அவசியம் வரும்படி அன்பாக அறிவுறுத்தப்பட்டார்களாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.