இந்தியில் பல்வேறு பிரபல நாடகங்களிலும், பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ள வைஷாலி தாக்கர், மத்தியப் பிரதேச தலைநகர் இந்தூரில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வருடமாக, இந்தூரில் தனது தந்தை, சகோதரர் உடன் வசித்து வரும் வைஷாலி, இன்று காலை அறையில் இருந்து வெளியில் வராததை அடுத்து அவரின் தந்தை கதவை உடைத்து பார்த்துள்ளார்.
அப்போது, வைஷாலி தற்கொலை செய்து உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
2015ஆம் ஆண்டு முதல் நடித்துவரும் இவர், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரின் பிறந்தவர். நடிப்புக்காக மும்பைக்கு சென்ற அவர், பின்னர் ஜெய்ப்பூரில் சிறிது நாள்கள் வசித்து வந்துள்ளார்.
வைஷாலி மரணம் குறித்து இந்தூர் உதவி காவல் ஆணையர் எம்.ரஹ்மான் கூறுகையில்,”வைஷாலியிடம் இருந்து தற்கொலை கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் அவர் மன உளச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரின் முன்னாள் காதலரால் துன்புறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்” என்றார்.
அவரின் தற்கொலை கடிதத்தை வைத்து போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரின் மொபைல் போனை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவரின் குடும்பத்தினருடைய வாக்குமூலத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
உயிரிழந்த வைஷாலி, சமீபத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘ரக்ஷபந்தன்’ திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.