பெரிய கண்மாய் மடை பழுதால் குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர்: சீரமைக்க கோரிக்கை

மானாமதுரை: மானாமதுரை சிப்காட் பெரிய கண்மாயில் உள்ள மடைகள் பழுதடைந்து மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து வீணாகி வருவதால் மடையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை நகர் எல்லையில் அமைந்துள்ள சிப்காட் பெரிய கண்மாய் மூலம் 200 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்களில் ஒருபோக நெல் சாகுபடி நடந்து வந்தது.

காட்டு உடைகுளம், இந்திரா நகர் பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்து வந்த நிலையில் வயல்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டு விட்டன. தற்ேபாது எஞ்சியுள்ள 150 ஏக்கர் விளைநிலங்களில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆட்சியின் போது நான்குவழிச்சாலை பணிகள், ரயில்வே இருப்பு பாதை பணிகளுக்காக கண்மாயில் உள்ள மண் அள்ளப்பட்டது. கனரக வாகன்ஙகள் சென்றதால் பெரிய கண்மாயில் இருந்து விளைநிலங்களுக்கு செல்லும் மடைகளில் பழுது ஏற்பட்டது.

கடந்த ஆட்சி காலத்தில் இந்த மடைகளை சீரமைக்காமல் அப்படியே விடப்பட்டதால் தற்போது மடைகள் முற்றிலும் சேதமடைந்து தண்ணீர் வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்து வெள்ளம்போல் தேங்கி வருகிறது. கடந்த மாதம் முதல் தற்போது வரை பெய்து வரும் மழைநீர் மற்றும் பெரிய கண்மாயின் உள்வாய் பகுதியில் சேகரமாகிய மழைநீர் மடைகளில் ஏற்பட்டுள்ள கசிவால் அனைத்தும் வெளியேறி இந்திரா நகர், கணபதி நகர் குடியிருப்புகளுக்குள் புகுந்து வெள்ளக்காடாகி வருகிறது.

இதனால் கடந்த ஆண்டை போலவே நகராட்சி 1வது வார்டுக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் ஏற்படுவதுடன் தேங்கிய மழைநீரில் விஷப்பூச்சிகளால் தொந்தரவு ஏற்படக்கூடும். எனவே பருவமழை தொடங்க உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாய் மடைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து விஜயகுமார் கூறுகையில், ‘கடந்த ஆண்டு இந்த மடைகளில் லேசான கசிவு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுப்பணி துறையினரிடம் தெரிவித்தேன். அவர்கள் இது ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்மாய் என்பதால், அங்கு சொல்லுமாறு தெரிவித்தனர். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் சொல்லியுள்ளேன். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.

கடந்த மாதம் பெய்த மழைநீர் கணபதி நகர், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது.  இதனால் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் பரவும், மேலும் விஷப்பூச்சிகள் மழைநீரில் வீடுகளுக்குள் புகுந்து விடும் அச்சமும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மடையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.