`பொன்னியைப் போற்றுவோம்!'; கங்கைக்கு நிகரான காவிரி துலா ஸ்நானம் வரும் செவ்வாய்க் கிழமை தொடக்கம்!

வருகிற (18-10-2022) செவ்வாய் கிழமை, ஐப்பசி மாத முதல் நாளில் புண்ணியம் அளிக்கும் காவிரி துலா ஸ்நானம் ஆரம்பமாகிறது.

துலா உற்சவம்

துலா காவிரி புராணம்!

சோழ நாட்டை பொன்னி நாடு என்றும், சோழ அரசனை பொன்னி நாடன் என்றும் சொல்வது உண்டு. சோழர்கள் ஆட்சி செய்த சோழ நாட்டில் காவிரியின் இருகரைகளிலும் சிவஸ்தலங்களையும் விஷ்ணு ஸ்தலங்களையும் எழுப்பி வழிபட்டு வந்ததால், தெய்வ பொன்னி சோழ நாட்டை ‘சோறுடைய’ நாடாக செய்கிறாள். ‘சோறு’ என்பதற்கு மோட்சம் என்றும் பொருள் உண்டு. இப்பிறவிக்கு உணவையும் அடுத்த பிறவியே இல்லாத மோட்சத்தையும் அளிக்கும் வள்ளல் இவள்.

ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ பரமேஸ்வரன் சொன்ன காவிரி மகாத்மியத்தை, தேவ வன்மன் என்ற அரசனுக்கு சுமத்திரங்கி என்ற ரிஷி சொல்ல தொடங்குகிறார். ஒரு சமயம் பார்வதி – பரமேஸ்வரர் ஒரு நந்தவனத்தில் தங்கி இருந்தபோது, அங்கு பறவைகள் வடிவில் வந்த நதி தேவதைகள் துலா (ஐப்பசி) மாதத்தில்  காவிரியில் ஸ்நானம் செய்து விட்டு அவ்விருவரையும் தரிசிக்க வந்தன. அவர்கள் வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் தந்த ஈஸ்வரன் கூறியதாவது, “கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடினாலும், தரிசித்தாலும், அதனை பக்தியுடன் தொட்டாலும், அதன் கரையில் தானம் தர்ப்பணம் செய்தாலும், எல்லா பாவங்களும் விலகி புண்ணியம் கிட்டும். இதன் கறைகளில் காசிக்கு சமமான ஸ்தலங்களும் இருக்கின்றன, நினைத்ததை தரும் சிந்தாமணியான காவிரி”.

திருச்சி காவிரி

இதே ஐப்பசி காவிரியில் நீராடி பலன்களையும் புண்ணியங்களையும் பெற்றவர்கள் ஏராளம். காவிரியில் துலாஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா பீஷ்மரை புத்திரனாக பெற்றார். அர்ஜுனன் துலாஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாத பெருமாளை தரிசித்து சுபத்ராவை மணம் புரிந்தார், என்கிறது புராணம். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசை அன்று கங்காதேவி காவிரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களை எல்லாம் போக்கிக் கொள்கிறாள், எனவும் கூறுகின்றனர்.

காவிரியை தட்சிண கங்கை என்றும் போற்றுகின்றனர். பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கல்யாண திருத்தரூபி, உலாபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லவை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கனபதசாவணி என காவிரி நதியை பல பெயர்களில் அழைக்கின்றனர்.

துலா காவிரி ஸ்நானம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்!

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்றும் போற்றுவார்கள். ஐப்பசி எனப்படும் துலாம் மாதத்தில் காவிரியில் நீராடுவதை ‘துலா ஸ்நானம்’ என்று விவரிக்கிறது, புராணம். இந்த பூவுலகில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளன, என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐப்பசியில் உலகில் உள்ள அறுபத்தாறு கோடி திருத்தங்களும் காவேரியில் சங்கமமாகின்றன என்பது ஐதீகம்.

ஐப்பசி துலா காவேரி ஸ்நானம் செய்பவர்கள், காவிரி ஆற்றுக்கு பூஜை செய்து வழிபடுவதுடன் அருகில் அரசமரம் இருந்தால், அம்மரத்திற்கு காவிரி நீரை ஊற்றி வலம் வந்து வணங்குவது புண்ணிய பலன்களை தரும்.

காவேரி

14 லோகங்களில் உள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவிரி நதியில் சங்கமமாவதால், ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது மகத்தான பலன்களை வழங்கும் என்கிறார்கள்.

காவிரியில் நீராடுபவர்கள், தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள். மேலும் துலா மாத ஐப்பசியில், காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு பிதுர் பூஜை செய்து அன்னதானம், வஸ்திரதானம் செய்தால் நம்முடைய பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள், ஆசி வழங்குவார்கள்.

மேலும் ஐப்பசியில் காவிரியில் நீராடினால் ஆயுளும் ஆரோக்கியமும் கூடும். வாக்கு பலிதம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என காவேரி மகாத்மியம் கூறுகிறது.

ஐப்பசி மாதம் முழுவதும் துலாம் மாதம் எனப்படும். இந்த காலங்களில் சூரிய உதயத்தில் செய்யும் புனித ஸ்நானம் துலாஸ்நானம் என்று போற்றப்படுகிறது. ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையிலும், கடைசி தேதி என்று மயிலாடுதுறை நந்திக்கட்டத்திலும் நீராட வேண்டும் என்பது முறை.

துலா ஸ்நானம்

தலைக்காவேரி, ராமபுரம், கொடுமுடி, ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்கோவில், சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பராண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர் துறைகளில் துலாம் மாதத்தில் நீராட சிறந்தவை ஆகும்.

வருகிற (18-10-2022) செவ்வாய் கிழமை, ஐப்பசி மாத முதல் நாள் ஆகும். இந்நாளில் காவிரி துலா ஸ்நானம் ஆரம்பமாகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.