விழுப்புரம்: மாணவர்கள் சிறிய அளவில் சந்தோசம் தரக்கூடிய செயல்களான சமூக வலைதளங்களுக்கு சென்று தேவையற்ற பகுதிகளை பார்வையிட்டு நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று விழுப்புரம் ஆட்சியர் மோகன் அறிவுறுத்தினார். விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நேரு யுவகேந்திரா அலுவலக கூட்டரங்கில் நேற்று நேரு யுவகேந்திரா சார்பில் இளையோர் திருவிழாவை ஆட்சியர் மோகன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது:
நம்நாட்டில் மனித சக்தியில் 35 சதவீதம் பேர் இளைஞர்களாக உள்ளனர். இந்த மனித சக்தியில் உள்ள ஒவ்வொருவரின் தனித்துவம், தனித்திறமையினை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பாக இவ்விழா உள்ளது. மனித சக்தியினை சிறந்த முறையில் பயன்படுத்தும் நாடுகளே வல்லரசு நாடுகளாக உருவாகும். ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இளைஞர் மன்றம் உருவாக்கிட வேண்டும். அந்த இளைஞர் மன்றங்கள் சுதந்திராக செயல்பட அனுமதிக்க வேண்டும். தேவையான உரிமைகள் வழங்க வேண்டும், ஜனநாயகம் உள்ளிட்டவற்றை பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே நேரு யுவகேந்திராவின் நோக்கம்.
அதனடிப்படையில் மாவட்ட அளவில் இளையோர் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இளையோர் திருவிழாவின் மூலம் மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணருவது மட்டுமல்லாமல். குடிமக்களின் கடமை உணர்வினை வெளிக்கொணருவதே ஆகும். மாணவர்கள் தற்பொழுது கற்றுக்கொள்ளும் பின்பற்றும் ஒழுக்கமான பழக்க வழக்கங்களே அனைத்து நிலைகளிலும் துணை நிற்கும். கவர்ச்சியான வார்த்தைகளை நம்பி போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளானால் நாம் அதிலிருந்து மீள்வது என்பது மிகவும் கடினமானதாக அமைந்து விடும். எனவே மாணவர்கள் எவ்வித தீய பழக்கத்திற்கும் ஆளாகாமல் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் சொற்பேச்சை கேட்டு நடந்திட வேண்டும்.
மாணவர்கள் சிறிய அளவில் சந்தோசம் தரக்கூடிய செயல்களான சமூக வலைதளங்களுக்கு சென்று தேவையற்ற பகுதிகளை பார்வையிட்டு தங்கள் நேரத்தையும் வீணடித்து வருகிறார்கள். மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி தரக்கூடிய நல்ல புத்தகங்களை படித்து தங்களை மேம்படுத்திக்கொள்வதோடு மட்டுமல்லாமல். அவ்வப்பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று தங்கள் தனித்திறமை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். விழாவில் நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் ராம்சந்திரன், பல்நோக்கு பணியாளர் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.