ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ரூ.1,317 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி: பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின்  ரூ.1,317.30 கோடி  மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பகுதியில் செயல்பட்டு வந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ஐஆர்இஓ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக குர்கிராம், பஞ்ச்குலா, லூதியானா, டெல்லி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணமோசடி புகார்கள் கூறப்பட்டன.

அதன் அடிப்படையில் டெல்லி அமலாக்கத்துறை, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்குபதிந்து விசாரணை நடத்தியது. மேலும் அந்த நிறுவனம், அதன் நிர்வாக இயக்குனர், துணைத் தலைவர் லலித் கோயல் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களில் சோதனை நடத்தியது. கடந்தாண்டு நவம்பரில் லலித் கோயல் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ரியல் எஸ்டேட் நிறுவனம், நிர்வாக  இயக்குநர் மற்றும் துணைத் தலைவர், தொடர்புடைய நிறுவனங்கள், முக்கிய நிர்வாக நபர்களுக்குச் சொந்தமான ரூ.1,317.30 கோடி  மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.