மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இந்துஜா. வைபவிற்கு தங்கச்சியாக அந்தப் படத்தில் இந்துஜா நடித்திருந்தது பலரையும் கவர்ந்தது. குறிப்பாக வைபவுடன் சேர்ந்து அவர் ஆடிய நடனமும் ரசிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி மெர்க்குரி, மகாமுனி, பூமராங் படங்களில் நடித்த அவரை பலரும் பாராட்டினர். அதிலும் குறிப்பாக ஆர்யாவுடன் இவர் நடித்த மகாமுனி படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதோடு இந்துஜாவுக்கும், நடிப்பு தெரிந்த நடிகை என்ற பெயரை பெற்றுத்தந்தது.
இதனையடுத்து அட்லீ இயக்கத்தில் விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்தார். படம் சரியாக போகவில்லையென்றாலும் இந்துஜாவின் நடிப்பு இதிலும் பேசப்பட்டது. மேலும் அவரது நடிப்பை ரசிகர்கள் வெறுத்தனர். ஆனால் உண்மையில் அந்த வெறுப்புதான் இந்துஜாவின் வெற்றி என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் ரசிகர்கள் வெறுத்தது இந்துஜாவையோ, அவரது நடிப்பையோ அல்ல. அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்தை. அப்படி பார்க்கையில் இந்துஜா அந்தக் கதாபாத்திரத்தில் ஒன்றிப்போயிருக்கிறார் என்று அர்த்தம்.
இப்படி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் இந்துஜா சமீபத்தில் நானே வருவேன் படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் தனுஷ் என்ற நடிப்பு ராட்சசனோடு இவரும் போட்டிப்போட்டு நடித்து பெயர் வாங்கினார். இதனால் மேற்கொண்டு அவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்துஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய்யிடமிருந்து ஒரு விஷயத்தை திருட வேண்டுமென கூறியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், ”பிகில் படத்தில் விஜய்யுடன் பணியாற்றியவரைஎந்த சூழ்நிலையிலும் அமைதியாகவும் சமநிலையுடனும் இருக்கும் விஜய்யின் அந்தக் கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதன்மூலம் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை கிடைக்கும்.
விஜய்யுடன் நடிக்கும்போது அந்தக் கேரக்டரைத்தான் எப்போதும் நான் அண்ணாந்து பார்ப்பேன். தான் ஒரு பெரிய ஸ்டாராக இருந்தாலும் அதற்காக அவர் செய்திருக்கும் விஷயம், எல்லா விஷயத்திலும் எல்லோரிடமும் சமமாக இருப்பது, சம மரியாதை கொடுப்பது போன்ற பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். விஜய்யின் அந்த கேரக்டரை அவரிடமிருந்து திருட வேண்டும்” என்றார்.