சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பேசுகையில், தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன? நேர்மையான முறையில் திட்ட உதவிகள் வழங்கப்படுகிறதா? என்று கண்டறிந்து வர பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார். இதற்காக 30 நாட்களில் 76 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகின்றனர். குறிப்பாக அடுத்த 20 நாட்களில் 50 அமைச்சர்கள் வருகை புரிந்து அனைத்து மாநகரங்களுக்கும் சென்று பார்வையிடுகின்றனர். தமிழகம் முழுவதும் 75 இடங்களில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இதற்கான தொடக்க விழா தான் அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. மேலும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தற்போது கோவையில் முகாமிட்டுள்ளார். அடுத்தகட்டமாக பல்வேறு மத்திய அமைச்சர்கள் வரவுள்ளதாக தெரிவித்தார்.