சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில் நாளை காலை வரை சபாநாயகர் அப்பாவு அவையை ஒத்திவைத்தார்.
அதன்பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. 19ஆம் தேதி வரை அவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் சட்டப் பேரவை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கான ஒரு அறிக்கை சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்படும்.
ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை ஆகிய இரு அறிக்கைகள் நாளை தாக்கல் செய்யப்படும். தேவைப்பட்டால் இது தொடர்பாக விவாதம் நடைபெறும்.
நாளை மறுநாள் கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கை மீது விவாதம் பதிலுரை வாக்கெடுப்பு நடைபெறும். நாளை, நாளை மறுநாள் இரண்டு நாள்கள் அவை முழுமையாக நடைபெறும்” என்று கூறினார்.
எதிர்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ் தொடர அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்துப் பேசிய அப்பாவு, “அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினராக ஓ.பன்னீர் செல்வம் இருப்பதால் அந்த அடிப்படையில் அவர் கலந்து கொண்டார். எதிர்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் இரண்டு கடிதங்களும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் நான்கு கடிதங்களும் எனக்கு வந்தன. அது குறித்து எடுக்கப்படும் முடிவுகளை சட்ட சபையில் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்” என்று கூறினார்.
அப்போது செய்தியாளர்கள், எதிர்கட்சித் துணைத் தலைவராக செயல்பட ஓபிஎஸ்ஸுக்கு அனுமதியளிக்கப்பட்டதால் பெரும்பாலான அதிமுகவினர் இன்று அவைக்கு வரவில்லை. நாளையும் இதே நிலை நீடித்தால் எவ்வாறு இந்தி எதிர்ப்பு போராட்ட அறிக்கையை பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவது என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அப்பாவு, “அதிமுக தொடங்கப்பட்டு 51ஆவது ஆண்டு தொடக்க விழாவுக்காக பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்றதாக தகவல். நாளை அவர்கள் அவைக்கு வருவார்கள். அவங்க வரக்கூடாதுன்னு ஏன் நீங்க நினைக்கிறீங்க” என்று சிரித்தபடியே கேட்டார்.
மீண்டும் ஓபிஎஸ், இபிஎஸ் கடிதங்கள் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், “அது குறித்து நாளை சட்ட சபையில் பதிலளிக்கிறேன். நாளைக்கு நீங்க வருவீங்கள்ல.. அவசர வேலையாக வெளிநாடு நாடு போறீங்களா தம்பி” என கிண்டலாக பதிலளித்தார்.
சட்டசபையில் விவாதம் நடைபெறும் போது ஆளுங்கட்சி, எதிர்கட்சி என அனைத்து தரப்புக்கும் தனது நகைச்சுவை பேச்சு மூலம் பதில் கொடுக்கும் சபாநாயகர் அப்பாவு இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களையும் விட்டுவைக்கவில்லை. நாளையும், நாளை மறுதினமும் அவையில் அப்பாவுவால் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது என செய்தியாளர்கள கமெண்ட் அடிக்கின்றனர்.