காங்கிரஸ் புதிய தலைவர் எப்படி இருக்கணும்? – ப.சிதம்பரம் விளக்கம்!

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர், காந்தி குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு நடக்க வேண்டும் என, அக்கட்சி மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சசி தரூர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் களத்தில் உள்ளனர். இதில், மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, சோனியா காந்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் அமர உள்ளார். இதனால் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இன்று நடைபெற்ற தேர்தலில், சுமார் 96 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பாக, தனியார் தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு, காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மத்திய முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதன் மூலம், காந்தி குடும்பத்தின் மீதான மதிப்பு ஒருபோதும் குறையாது. காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்கும் நபர், காங்கிரஸ் காரியக் கமிட்டி, நாடாளுமன்றக் குழு மற்றும் கட்சி மன்றங்களில், காந்தி குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்களை கட்டாயம் கேட்டு நடக்க வேண்டும்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் தலைவரை, ரீமோட் கன்ட்ரோல் காந்தி குடும்ப உறுப்பினர்கள் இயக்குவார்கள் என்ற செய்தி முற்றிலும் தவறானது. தேர்தல் மூலம் மாவட்ட அளவில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் காந்திகளால் ஆணையிட முடியும் என்று நினைக்கிறீர்களா?

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.