லடாக்: கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அதன் பின் அமைதி திரும்பினாலும், லடாக் எல்லைப் பகுதி பதற்றமாகவே காணப்படுகிறது.
இதையடுத்து அங்கு ராணுவ வீரர்கள், போர் விமானங்கள், அதிநவீன ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கிழக்கு லடாக் எல்லையில் ஆளில்லாத அதிநவீன ட்ரோன்களை நிலை நிறுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இதன்படி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 80 ட்ரோன்களை ராணுவம் வாங்குகிறது.
இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, ‘‘ரஷ்யா – உக்ரைன் போரில் ட்ரோன்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது இஸ்ரேல் நாட்டில் இருந்து வாங்கப்பட்ட ஹெரோன் ட்ரோன்கள் லடாக் எல்லையில் பயன்பாட்டில் உள்ளன. கூடுதல் ட்ரோன்களை எல்லையில் நிலைநிறுத்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை வாங்குகிறோம். இந்த ட்ரோன்கள் மூலம் 15 கிலோ வரை வெடிகுண்டுகளை சுமந்து சென்று எதிரியின் இலக்கை தாக்க முடியும்’’ என்று தெரிவித்தன.