மதுரை :’மெனோபாஸ்’ என்பது மாதவிடாய் நிற்பது மட்டும் அல்ல. ஹார்மோன் மாற்றங்களும் அதுசார்ந்த உடல்நல வேறுபாடுகளும் ஏற்படுவதால் அதற்கேற்ப பெண்கள் தயாராவதே நல்லது என்கிறார் மதுரை மகப்பேறு நிபுணர் ரேவதி ஜானகிராம்.
அவர் கூறியதாவது:
‘மெனோபாஸ்’ மனநலம் சம்பந்தப்பட்டது. ஒருபக்கம் வயதாவதால் வரும் மாற்றங்கள், மறுபுறம் ஹார்மோன் குறைவதால் ஏற்படும் மாற்றங்கள். இதை ஒவ்வொரு பெண்ணும் அறிவது அவசியம். பிரெய்ன் பாக்’ எனும் மூளை மூடுபனி, அதாவது சிந்திக்க சிரமப்படுவது, ஞாபகசக்தி குறைதல், மனச்சோர்வு, தேவையற்ற கவலை, படபடப்பு போன்றவை ஏற்படுவது சகஜம்தான். அதை சமாளித்து சந்தோஷமாக வாழ வழி இருக்கிறது. அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அகில உலக மெனோபாஸ்’ சங்கம் அக்.,18 ஐ உலக ‘மெனோபாஸ்’ தினமாக கொண்டாடுகிறது.
வாழ்க்கை முறை மாற்றங்களாலும், தேவைப்பட்டால் ஹார்மோன் சிகிச்சையாலும் இதை சரிப்படுத்த முடியும். சிலருக்கு உடல் சூடாவது, படபடப்பு, அதிகமாக வியர்த்துக் கொட்டுவது, துாக்கமின்மை போன்ற தொந்தரவுகள் வரலாம். இது ‘ஈஸ்ட்ரோஜன்’ என்ற ஹார்மோன் குறைவதால் தோன்றுகிறது. இந்த தொந்தரவு அதிகமாக இருந்தால் மருத்துவர்கள் ஹார்மோன் மாத்திரை பரிந்துரைப்பர். நல்ல பலன் கிடைக்கும். மிருதுவான பருத்தி ஆடை அணியலாம். நீர்சத்துள்ள பழம் காய்கறிகளை நிறைய சாப்பிட வேண்டும்.
சரியான உணவுப்பழக்கங்களும் முறையான உடற்பயிற்சியும் அவசியம். நடைப்பயிற்சி, மூச்சு பயிற்சி, யோகா போன்றவை சுலபமாக செய்யக்கூடியவையே. தனிமை, கவலை இவற்றை மாற்ற சின்ன சின்ன சந்தோஷமான பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொள்வது பயன் தரும். நமக்கு பிடித்த, சின்ன வயதில் செய்ய முடியாமல் விட்ட தையல்,தோட்டக்கலை, புத்தகம் வாசிப்பது, பாட்டு, போன்றவற்றில் ஈடுபடலாம். கோலம் போடுவது கூட கை,விரல்கள், கண், மூளைக்கான பயிற்சியாக இருக்கும்.
உடல் எடையை சீராக வைப்பதும், ரத்தஅழுத்தம், சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மனஅழுத்தத்தை குறைக்கும்.
எவ்வளவு நாள் வாழ்கிறோம் என்பதை விட எவ்வளவு மனம், உடல் ஆரோக்கியத்துடன் வாழ்கிறோம் என்பதே முக்கியம். பெண்ணின் வாழ்நாள் 50 லிருந்து 80 ஆக உயர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு ‘மெனோபாஸ்’ காலத்திற்கு பிறகு வாழ்கிறோம். அந்த காலத்தில் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருப்போம். அது நம் கையில்தான் இருக்கிறது, என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement