போராட்டங்கள் நிறைந்ததுதானே வாழ்க்கை. அந்தப் போராட்டங்களிலும், எந்தளவுக்கு மனோதிடத்துடன், சந்தோஷமாக அச்சூழலை எதிர்கொள்கிறோம் என்பதுதானே முக்கியம். அப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவம்தான் சமீபத்தில் அரங்கேறி உள்ளது.

இத்தாலியில் GZ என அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு, ரோமில் உள்ள பைடியா என்ற சர்வதேச மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிடப்பட்டது. இந்தச் சிகிச்சையின்போது இவரின் நரம்பியல் செயல்கள் தொடர்ந்து செயல்பட, இவர் விழித்திருக்க வேண்டும்.
இந்த அறுவை சிகிச்சை, அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டாக்டர் கிறிஸ்டியன் ப்ரோக்னா ( Christian Brogna) என்ற அறுவை சிகிச்சை நிபுணரின் தலைமையில், மிகவும் சிறப்பு வாய்ந்த 10 நபர்களைக் கொண்ட சர்வதேச குழுவின் மூலம் செய்யத் திட்டமிடப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு முன்பு தன்னுடைய இசை வாசிக்கும் திறனைக் குறித்து மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார், அந்த நபர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 9 மணி நேர அறுவை சிகிச்சையில், 1970 – ல் வெளிவந்த திரைப்படமான `லவ் ஸ்டோரி’ படத்தில் இருந்து தீம் பாடலையும், இத்தாலியின் தேசிய கீதத்தையும் சாக்ஸபோன் (saxophone) மூலம் அறுவை சிகிச்சை முழுதும் வாசித்தார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப் பட்டார்.

இது குறித்து மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறுகையில், “நோயாளியின் மூளையில் குறிப்பிட்ட பகுதியில் அமைந்துள்ள கட்டிகளையும், ரத்த நாளங்களின் அசாதாரண வளர்ச்சியையும் சரிசெய்ய `விழித்திருக்கும் மூளை அறுவை சிகிச்சை’ (Awake Surgery) மேற்கொள்ளப்பட்டது.
இயல்பு வாழ்க்கைக்கு நோயாளி திரும்பியதில் பெருமிதம் கொள்கிறேன். ஒவ்வோர் அறுவை சிகிச்சையின் போதும், இந்த மருத்துவப்பிரிவு பற்றிய அறிவு முன்னேறுவதைப் பெருமையாகக் கருதுகிறேன்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.