நகை, பணத்துக்காக ஆசிரிய தம்பதி கொலை; 3 மாதங்களுக்குப் பிறகு சிக்கிய தம்பதி! – என்ன நடந்தது?

அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகர் வடக்கு 2-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கரபாண்டியன். இவருடைய மனைவி ஜோதிமணி. ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதிகளான சங்கரபாண்டியன் – ஜோதிமணி அருப்புக்கோட்டையில் தனியே வசித்து வந்தனர். இந்தத் தம்பதியின் மகன் சதீஷ் சென்னையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஜூலை 18-ம் தேதி சங்கரபாண்டியன் -ஜோதிமணி தம்பதியரை மர்ம நபர்கள் கொலைசெய்துவிட்டு நகைப் பணத்தை திருடிச் சென்றனர். அருப்புக்கோட்டை நகரை உலுக்கிய இந்தச் சம்பவத்தில் ஜ.ஜி அஸ்ரா கார்க் உத்தரவுப்படி 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். ஆனால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த தனிப்படை போலீஸார் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளைக்கொண்டு ஆராய்ந்து பார்த்தனர். அப்போது கொலைச்சம்பவத்துக்கு முன்னதாகவும் கொலைச்சம்பவத்துக்குப் பின்னரும் அந்தப் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சென்றவர்கள் குறித்து சி.சி.டி.வி கேமராவில் ஆராய்ந்ததில் ஜோதிபுரம் 7-வது தெருவில் வசிக்கும் மில் தொழிலாளி சங்கர்(42) என்பவர் அந்தப் பகுதியில் அடிக்கடி சைக்கிளில் சென்று வந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீஸார், சங்கரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இது குறித்துப் பேசும் போலீஸார், “எம்.டி.ஆர்.நகர் 2-வது தெருவில் கொலைசெய்யப்பட்ட சங்கரபாண்டியன்-ஜோதிமணி தம்பதியினர் வீட்டிற்கு எதிரே சில மாதங்கள் சங்கர், தன் மனைவி பொன்மணியுடன் வாடகைக்கு குடியிருந்திருக்கிறார். எதிர்வீட்டினர் என்ற அறிமுகத்துடன் பொன்மணி, சங்கரபாண்டியன் -ஜோதிமணி தம்பதியருடன் நன்றாகப் பழகி வந்திருக்கிறார். அந்த சமயம், கடன் தொல்லையால் சங்கர் பெரும் அவதிப்பட்டு வந்திருக்கிறார். அதனால் தன் மனைவி பொன்மணி மூலமாக, சங்கரபாண்டியனிடம் பணம் கடனாகக் கேட்டிருக்கிறார். ஆனால் சங்கரபாண்டியன் பணம் தர மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர், சங்கரபாண்டியன்-ஜோதிமணி தம்பதியைக் கொலைசெய்து அவர்களிடத்திலிருந்து நகை, பணத்தை திருட தன் மனைவி பொன்மணியுடன் இணைந்து திட்டம் தீட்டியிருக்கிறார்.

இதற்காக சம்பவ தினத்தன்று, சங்கரபாண்டியன் வீட்டில் அதிகாலை வரை பாத்ரூமில் சங்கர் பதுங்கியிருந்திருக்கிறார். பின்னர் அதிகாலையில், ஜோதிமணி தனது வீட்டு வாசலில் கோலம் போடுவதற்காக வந்தபோது வீட்டுக்குள் நுழைந்த சங்கர் தூங்கிக்கொண்டிருந்த சங்கரபாண்டியனை கழுத்தில் குத்திக் கொலை செய்திருக்கிறார். சங்கரபாண்டியனின் முனுகல் சத்தம் கேட்டு ஜோதிமணி உள்ளே வரவும் அறைக்கதவின் பின்னால் மறைந்திருந்த சங்கர் ஜோதிமணியையும் கத்தியால் குத்திக் கொலைசெய்திருக்கிறார். பின்னர் பொறுமையாக அவர் அணிந்திருந்த தங்க நகைகள், வீட்டிலிருந்த பணம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு தன் மனைவி பொன்மணியுடன் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்” என்கிறார்கள்.

கைது

சங்கரையும், பொன்மணியையும் கைதுசெய்த போலீஸார், அவர்களிடமிருந்து 10 சவரன் தங்க நகை மற்றும் கொலைசெய்ய பயன்படுத்தப்பட்ட டூவீலர், சைக்கிள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். நகை-பணத்துக்காக கணவன் மனைவி சேர்ந்து பழகியவர்களையே கொலைசெய்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.