சாமானியர் ஒருவரின் மரணம் அவரின் குடும்பத்தினருக்கு மறக்கமுடியாத ஒன்றாக நினைவில் தங்கி நிற்கும். ஆனால், காவேரியம்மாளின் இறப்பு துக்கத்தைத் தாண்டி அங்கு நிகழ்ந்த முற்போக்கான நடவடிக்கை காரணமாக தமிழகம் முழுக்க பேசுபொருளாகி இருக்கிறது. இறந்தவர்களின் உடலை பொதுவாக ஆண்கள் சுமந்து செல்வது வழக்கம் இருக்கிறது. ஆனால்,காவேரியம்மாளின் உடலை பெண்கள் மட்டுமே சுமந்து சென்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் நாகராசன். இவர் திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் உள்ளார். இவரது தாயார் காவேரியம்மாள் நேற்று முன்தினம் வயது மூப்பின் காரணமாக காலமானார்.
நாகராசுவும் அவரின் தாயாரும் பெரியாரிய சிந்தனைகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். காவேரியம்மாள் தனது ஐம்பது வயதுக்கு மேல் சுயமரியாதை கொள்கையை ஏற்றுக்கொண்டு கருப்புச் சேலையோடு களம் கண்டவர். எனவே, இவர் இறந்த போது,பெரியாரியக் கொள்கைப்படி சடங்கு, சம்பிரதாயங்கள் எதுவுமில்லாமல் அவரது நினைவுகளைப் போற்றி வீரவணக்கம் செலுத்தினர்.
இறந்தவர்கள் உடலை பொதுவாக ஆண்கள் சுமந்து செல்வது வழக்கம். ஆனால், காவேரியம்மாளின் உடலை பெண்கள் மட்டுமே சுமந்து சென்றனர். உடலை இடுகாட்டில் அடக்கமோ, எரியூட்டவோ செய்யாமல் மருத்துவம் பயிலும் மாணவர்களின் உடற்கூறு ஆய்விற்கு பயன்படும் வகையில் கோவை அரசு மருத்துவமனைக்கு உடலை தானமாக வழங்கினார்கள். மேலும், 2015 ம் ஆண்டு காலமான நாகராசுவின் தந்தை உடலும் மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டது.
இதுகுறித்து நாகராசன் பேசினோம், “கூட்டத்திற்குப் போகிறேன் வருவதற்கு நேரமாகும் என்று சொன்னாலும் கூட , அம்மா என்கிற குரல் கேட்கிறபோதே கதவைத் திறந்து விட்டு வாஞ்சையோடு அழைப்பார்.
போராட்டத்துல கலந்துக்கிட்டு உன் பையன் ஜெயிலுக்கு போயிருக்கான்’னு சொல்லும் போது, `ஆமா, ஜெயிலுக்குப் போயிருக்கான் என்னத்துக்குப் போனான் நாட்டுக்குப் போராடிப் போனான்’ என்பார். இன்றைக்கு எனக்கொரு அரசியல் அடையாளமிருக்கிறது. இது எனக்கு பெரியாரால் கிடைத்தது.

ஆனால், அந்தப் பெரியாரிய கொள்கையில் நான் பற்று உறுதியாக நிற்பதற்கு எனது அம்மா தான் முக்கிய காரணம். என்னால் ஏற்பட்ட இழப்புகள் வலிகள் துன்பங்கள் அனைத்தையும் இடது கையால் துடைத்துவிட்டு என்னால்தான் மொத்தக் குடும்பத்திற்குமே மதிப்பென்று எப்போதும் என்னை விட்டுக்கொடுக்காமல் பேசுவார். அம்மாவின் வெற்றிடம் இனி எப்போதும் நிரப்பப்படாததே. அவரின் இறுதி ஊர்வலம் இப்படிதான் நடக்க வேண்டும் என்பது அவரின் விருப்பம். அப்பாவின் உடலைப் போலவே அம்மாவின் உடலும் அவரின் விருப்பப்படி உடற்கூறாய்வுக்காக வழங்கப்பட்டது. சக மனிதனுக்கும், சமூகத்துக்கும் பயனளிக்கும் வகையில் வாழ்வதுதானே நிறைவான வாழ்வு” என்றார்.