லண்டன்: தனது தலைமையிலான அரசு செய்த பொருளாதார நடவடிக்கைகளில் செய்த தவறுகளுக்கு பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரிட்டனின் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற லிஸ் ட்ரஸ் பிரிட்டனின் மந்தமான பொருளாதாரத்தை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், லிஸ் ட்ரஸின் இந்த முடிவு பிரிட்டன் பொருளாதாரத்தை உயர்த்த உதவவில்லை. இதனால், டாலருக்கு நிகரான பிரிட்டனின் பவுண்டின் மதிப்பு குறைந்து வருகிறது. பங்குச் சந்தை மதிப்புகளும் வீழ்ச்சி அடைந்தன.
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் கூறும்போது, “நான் எனது கடமைகளை முழு பொறுப்புடன் ஏற்றுக்கொள்ள நினைக்கிறேன். அதேநேரத்தில் என்னுடைய தவறான பொருளாதார நடவடிக்கைகளுக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன். நமது பொருளாதாரத்தை சரிசெய்வதில் நான் ஏற்ற இறக்கங்களை சந்தித்தபோதிலும், தலைவராக தொடர்ந்து அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பேன்” என்றார்.
முன்னதாக, இந்தத் தவறுகளுக்கு காரணம், போதிய பொருளாதார ஆலோசனை இல்லை என்பதை சுட்டிக்காட்டி நிதியமைச்சர் கவாசியை லிஸ் ட்ரஸ் நீக்கினார்.
இதன் தொடர்ச்சியாக, புதிய நிதியமைச்சராக பிரிட்டனின் வெளியுறவுத் துறை இணையமைச்சராக இருந்த ஜெர்மி நியமிக்கப்பட்டார். பதவி ஏற்றது முதல் ஜெர்மி, பிரிட்டனின் பொருளாதார ஆலோசகர்கள், லிஸ் ட்ரஸ்ஸுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து வரிச் சலுகைகளும் திரும்பப் பெறுவதாக அவர் அறிவித்தார்.
இதுகுறித்து ஜெர்மி கூறும்போது, “நான் பிரதமருடன் ஆலோசனை செய்த பிறகுதான் இந்த அறிவிப்பை வெளியிட்டேன். இதற்கு லிஸ் ட்ரஸ்ஸும் ஒப்புக் கொண்டார். புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என்றார்.
பிரிட்டனில் புதிய பட்ஜெட் அக்டோபர் 30-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பொருளாதாரத்தை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டில்தான் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், புதிய அரசு பதவியேற்று பிரிட்டனின் பொருளாதாரப் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் திணறி வருகின்றது.