மும்பை: மகாராஷ்டிராவில் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே ஆதரவைப் பெற்ற அந்தேரி கிழக்கு தொகுதி எம்எல்ஏ ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்தேரி கிழக்கு தொகுதிக்கு அடுத்த நவம்பர் மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் மறைந்த ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியிடுகிறார். இதேபோல முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி ஆதரவுடன் பாஜக வேட்பாளராக முர்ஜி படேல் நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், உத்தவ் தாக்கரே சிவசேனா வேட்பாளர் ருதுஜா லட்கேவுக்கு, ராஜ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், அவர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என பாஜகவுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.
அவரது கோரிக்கையை பாஜக ஏற்றுக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் முர்ஜி படேல் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதையடுத்து உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ருதுஜா போட்டியின்றி அந்தத் தொகுதியிலிருந்து தேர்வாகவுள்ளார். தனது கோரிக்கையை ஏற்று இடைத்தேர்தலில் இருந்து பாஜக வேட்பாளரை வாபஸ் பெறச் செய்ததற்கு மகாராஷ்டிர துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸுக்கு ராஜ் தாக்கரே நன்றி தெரிவித்துள்ளார்.