RSS ஊர்வலம் தொடர்பான திருமாவளவன் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

சென்னை: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் இரண்டாம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.

ஆனால் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பலரும் தங்களது ஆட்சேபனையை தெரிவித்துவருகின்றனர். இந்தச் சூழலில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

தொல் திருமாவளவன் தாக்கல் செய்திருந்த மனுவில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முந்தைய கால நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமல்,அதன் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே, மகாத்மா காந்தியை கொலை செய்தபோது இனிப்பு வழங்கி கொண்டாடியது ஆர்எஸ்எஸ் என்று அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.